
இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்குத்தள்ளி பாஜக காலூன்ற முயல்கிறது. அதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு திமுக மீதான பாஜக விமர்சனங்கள் முற்றியுள்ளன.
தமிழகத்தில் பாஜகவால், காலை அல்ல; கையைக் கூட ஊன்ற முடியாது எனவும், இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது எனவும் திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
தேசிய கீதத்துக்கு எழுந்து நின்ற விஜயேந்திரர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்காக விஜயேந்திரர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் வயது முதிர்வு காரணமாக கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத வீடியோவை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
விஜயேந்திரர் தமிழை அவமதித்ததாக விமர்சனங்கள் வலுத்துள்ள நிலையில், பதிலடி கொடுக்கும் வகையில் கருணாநிதியின் வீடியோவை எச்.ராஜா பதிவிட்டிருந்தது விமர்சனத்துக்குள்ளானது.
இவ்வாறு திமுக-பாஜக மோதல் வலுத்துவருகிறது. அரசியலுக்கு வரும் ரஜினியை பின்னிருந்து இயக்குவது பாஜகதான் என்றொரு கருத்தும் பரவலாக பேசப்படுகிறது. அதற்கேற்றாற்போல் அவரும் ஆன்மீக அரசியல் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இதற்கிடையே, சென்னை வந்த பிரதமர் மோடி, கோபாலபுரத்தில் உள்ள வீட்டிற்கு சென்று கருணாநிதியை சந்தித்தார். வயது முதிர்வு காரணமாக ஓய்வில் இருக்கும் கருணாநிதியை மரியாதை நிமித்தமாகவே பிரதமர் பார்த்தார் என கூறப்பட்டாலும், அரசியல் ரீதியான கூட்டணிக்கான அஸ்திவாரம் தான் அந்த சந்திப்பு என்ற கருத்து எழுந்தது.
இந்நிலையில், தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு ஸ்டாலின் அளித்த பேட்டியில், இனி எப்போதுமே பாஜகவுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக ஸ்டாலின் தெரிவித்துவிட்டார். மேலும் தனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில், நெருக்கடி நிலையை எல்லாம் விட கருணாநிதி அரசியலில் இல்லாத இந்த ஓராண்டு காலம் தான் மிகவும் கடினமாக இருந்ததாகவும் இந்த ஓராண்டில்தான் முடிவெடுப்பது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்துகொண்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.