
பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட் அவுட்களோ பேனர்களோ வைக்கக்கூடாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் திருச்சி முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமித்துள்ளன.
பேனர்கள், கட் அவுட்களை அகற்றக்கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட்களோ அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களோ வைக்கக்கூடாது என உத்தரவிட்டது. மேலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது எனவும் இதை உள்ளாட்சி நிர்வாகமும் போலீசாரும் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
ஆனால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சியை ஆக்கிரமித்திருக்கும் பேனர்கள் அகற்றப்படவில்லை. நாளை திருச்சியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக திருச்சி மாநகராட்சி முழுவதும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலையும் பேனர்மயமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியின் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பேனர்கள் அகற்றப்படவில்லை. இவற்றை அகற்ற மாநகராட்சி நிர்வாகமோ போலீசாரோ நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக கேள்வியெழுப்பினால், உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்பான எந்தவிதமான அதிகாரப்பூர்வ நோட்டீசும் வரவில்லை எனவும் அப்படி வந்தால், அதன்பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகமும் போலீசாரும் அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல், இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைத்திருப்பது அரசு மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.