காவலர்களை களங்கப்படுத்திய பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை.. முதல் ஆளாக வரவேற்ற தமிமுன் அன்சாரி..!

By vinoth kumarFirst Published Jul 5, 2020, 2:31 PM IST
Highlights

காவல் துறையின் மாண்புகளை குலைப்பது, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது என காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும்  களங்கத்தை ஏற்படுத்துவதாக பல ஜனநாயக சக்திகளும் இக்கோரிக்கைக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.

தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை தடை செய்யப்பட்டதற்கு  நாகை எம்.எல்.ஏ.வும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி வரவேற்பு அளித்துள்ளார். 

இதுதொடர்பாக எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சாத்தான்குளம் இரட்டை கொலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை கலைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோரிக்கை விடுத்தோம். காவல் துறையின் மாண்புகளை குலைப்பது, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது என காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும்  களங்கத்தை ஏற்படுத்துவதாக பல ஜனநாயக சக்திகளும் இக்கோரிக்கைக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.

சர்ச்சைக்குரிய  பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் அதில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் வலுத்ததால் தமிழகம் முழுக்க இதற்கு எதிராக கண்டனங்கள் வலுத்தது. அதன் எதிரொலியாக இன்று தமிழகம் முழுக்க பிரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் அமைப்புக்கு தடை விதிப்பதாக தமிழக காவல் துறை அறிவித்திருக்கிறது. இதை  வரவேற்கிறோம். இதை நிரந்தர தடையாக நீடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மனித உரிமைகளை பாதுகாத்து சட்டத்தின் வழியில் அனைவரும் கடமையாற்ற வேண்டும் என்பதே நமது விருப்பமாகும். இதற்கு ஏற்பளிக்கும் வகையில் தமிழக காவல் துறை அறிவிப்பு வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்கது என தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

click me!