
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி லண்டன் துறைமுகத்தில் பேண்ட் இன்-ஷர்ட்டுடன் டிப்டாப்பாக அதிகாரிகளுடன் உள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இப் புகைப்படத்தை திமுக தொண்டர்கள் பகிர்ந்து, அவரை பாராட்டி வருகின்றனர்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் சென்றிருந்தார். அங்கு பல தொழில் நிறுவனங்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார். அவரின் பயணம் ஆக்கபூர்வமானது என்றாலும்கூட எதிர்க்கட்சிகள் அதை கடுமையாக விமர்சித்தன. இது ஒருபுறம் உள்ள நிலையில் தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை இயக்கப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சார துறையை மேம்படுத்துவது தொடர்பாகவும் கடலில் காற்றாலை மின்சாரம் தயாரிப்பது குறித்து ஆய்வு செய்யவும் அரசுமுறை பயணமாக பிரிட்டன் மற்றும் ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தில் எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி தமிழ்நாடு மின் பகிர்மான இயக்குனர் சிவலிங்கராஜா உள்ளிட்டோர் அவருடன் சென்றுள்ளனர். இந்நிலையில் பிரிட்டன் மான்செஸ்டரில் அசோசியேட் பிரிட்டிஷ் போர்ட்ஸ் கிரிம்ஸ்பி இம்மிங்ஹாம் துறைமுகத்தில் அவர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அதற்கான புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் வழக்கத்துக்கு மாறாக செந்தில் பாலாஜி தமிழக அரசு அதிகாரிகளுடன் பாண்ட் பேண்ட் இன்-ஷர்ட் அணிந்து மிகவும் ஸ்மார்டாக காட்சியளிக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. எப்போதும் கரை வேட்டி சட்டையில் கம்பீரமாக வளம் வரும் செந்தில் பாலாஜி ஐஏஎஸ் அதிகாரிகளை போல புல் பார்மல் உடையில் இருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதை திமுக தொண்டர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து பயணம் சிறக்க செந்தில்பாலாஜிக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.