நாளை இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்த திட்டம்..!! மருத்துவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி அறிவிப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 21, 2020, 5:27 PM IST
Highlights

வூஹானில் கொரோனா பரவத்தொடங்கிய பிறகு 3 மாதங்களுக்கு மேல் கால அவகாசம் இருந்த போதிலும் மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பு கவசங்கள், பரிசோதனை கருவிகள் போன்றவற்றை போதிய அளவு கொள்முதல் செய்யவில்லை.

மருத்துவர்களின்  பாதுகாப்பு மற்றும் மாண்பை உறுதி செய்திட வலியுறுத்தி நாளை இரவு  நடைபெற உள்ள மெழுகுவர்த்தி ஏற்றும் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள  வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது  இது குறித்து இச்சங்கத்தின்  பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:- இந்தியாவிலும், தமிழகத்திலும் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.மருத்துவர்கள்,மருத்துவத்துறை பணியாளர்களுக்கு தரமான பாதுக்காப்பு கவச உடைகள், முகக்கவசங்கள்,தங்கும் வசதிகள் உணவு முதலியவை வழங்கப்படவில்லை. இதனால் , ஏராளமான மருத்துவர்களும்,மருத்துவப் பணியாளர்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். 

வூஹானில் கொரோனா பரவத்தொடங்கிய பிறகு 3 மாதங்களுக்கு மேல் கால அவகாசம் இருந்த போதிலும் மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பு கவசங்கள், பரிசோதனை கருவிகள் போன்றவற்றை போதிய அளவு கொள்முதல் செய்யவில்லை. உற்பத்தியும் செய்யவில்லை.இதன் காரணமாக ,பல இடங்களில் கொரானா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் மருத்துவப் பணியாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்றுக்கும் உள்ளாகின்றனர்.  பொது இடங்களில் ,மருத்துவர்களும் ,செவிலியர்களும் ,மருத்துவப் பணியாளர்களும் தாக்கப்படுகின்றனர். இது குறித்து மத்திய மாநில அரசுகள் போதிய நடவடிகைகளை எடுக்கவில்லை. மருத்துவர்கள்,மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுக்காப்பற்ற சூழல் நிலவுகிறது. மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும், மருத்துவமனைகளையும் பாதுகாத்திட மத்திய ,மாநில அரசுகள் சட்டம் கொண்டு வரவேண்டும். 

பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சமூக நிலைமைகளையும் உருவாக்கிட வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  சிகிச்சை வழங்குவதால் வீரமரணம் அடையும் மருத்துவர்களின் உடல்களை கௌரவான முறையில் எரியூட்டவோ அல்லது அடக்கம் செய்யவோ  காவல் துறை பாதுகாப்புடன், அரசு மரியாதையுடன் அவர்களது இறுதி நிகழ்ச்சிகளை நடத்திடவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லை எனில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் உள உறுதியும், நம்பிக்கையும் மோசமாக பாதிக்கப்படும். எனவே, மருத்துவர்களை,மருத்துவப் பணியாளர்களை பாதுக்காப்பது அவசியம். அவர்களுக்கு தேவையான பாதுக்காப்பு உடைகள் வழங்க வேண்டும். கொரோனா தொற்றாமல் இருக்கத் தனிமைப் படுத்தப்படுதல் உள்ளிட்ட  அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ள வேண்டும். 

மருத்துவர்களை பாதுக்காக்க கோரி  ,மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி நாளை (22.04.2020)  இரவு 9.00 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்றும் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் மருத்துவர்களின் சார்பில் நடைபெற உள்ளது. இந்த மெழுகுவர்த்தி ஏற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மருத்துவப் பணியாளர்களும்,மருத்துவர்களும், செவிலியர்களும், சமூக இடைவெளி விட்டு பங்கேற்றிட வேண்டும். மொட்டை மாடிகளிலும், அவரவர் வீட்டு வாயில்களிலும் மெழுகுவர்த்தி அல்லது டார்ச் விளக்கு ஏந்தி மருத்துவர்களுக்கும்,மருத்துவப் பணியாளர்களுக்கும் ஆதரவுதர வேண்டும். தமிழக மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும்,தொழிற் சங்கங்களும், வெகுமக்கள் அமைப்புகளும், சமூக இயக்கங்களும் இதில் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்திட வேண்டும் என,சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.  
 

click me!