தமிழகத்தில் 3,30,000 தாக்கும் கொரோனா.. MGR பல்கலை. அரசுக்கு அறிக்கை அளித்திருப்பது உண்மையா? அலறும் டி.டி.வி.

By vinoth kumarFirst Published Jun 9, 2020, 1:56 PM IST
Highlights

தமிழகத்தில் அடுத்தடுத்த மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும் என்று எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் அளித்திருப்பதாக கூறப்படும் அறிக்கையை பழனிசாமி அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்தடுத்த மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும் என்று எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் அளித்திருப்பதாக கூறப்படும் அறிக்கையை பழனிசாமி அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழகத்தில் அடுத்தடுத்த மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும் என்று எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அளித்திருப்பதாகக் கூறப்படும் அறிக்கையை தமிழக அரசு அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும். அதனடிப்படையில் அரசு மேற்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

சென்னையிலுள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ நிபுணர்கள் கொரோனா பாதிப்பின் வீரியம் குறித்து ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசுக்கு அறிக்கை அளித்திருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவருகின்றன. அந்த அறிக்கையில் 'ஜூலை 15ம் தேதி வாக்கில் தமிழகத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள். இதில் சென்னையில் மட்டுமே 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்புக்கு ஆளாவார்கள். இவர்களில் சென்னையைச் சேர்ந்த 1,654 பேர் உட்பட தமிழகம் முழுவதும் பலியாவோர் எண்ணிக்கை 1,949 ஆக இருக்கும். மேலும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனாவின் பாதிப்பு மிக மோசமானதாக இருக்கும்' என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இப்படியோர் அறிக்கை அளிக்கப்பட்டிருப்பது உண்மை எனில் அதனை தமிழக அரசு அதிகாரபூர்வமாக வெளியிடாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை. அதோடு அந்த அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதையும் மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. ஏற்கெனவே கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அப்படியிருந்தும் ஆளுமைமிக்க ஆட்சித்தலைமை இல்லாததால், அதிகாரிகளுக்குள் ஈகோ யுத்தம், ஒருங்கிணைப்பு இன்றி தடுமாறும் அரசு எந்திரம் என கொரோனாவைத் தடுப்பதில் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், ஆட்சியாளர்கள் இப்போதாவது விழித்துக்கொள்வது அவசியம்.

பாதிப்பு ஆயிரங்களில் இருக்கும் போதே அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. தனியார் மருத்துவமனைகளையும் அரசால் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய முடியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பே சென்னை மாநகராட்சியின் வசம் ஒப்படைக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்களை எப்படி பயன்படுத்துவது என்ற திட்டமோ, அதற்கான செயல்பாடுகளோ அரசிடம் இருப்பதாகவும் தெரியவில்லை.

செப்டம்பர், அக்டோபரில் மழைக்காலம் என்பதால் அப்போது கொரோனா உச்சத்திற்குப் போனால் என்ன செய்வது என்று யோசித்து, அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதிலும் சென்னையில் வடிகால்களைச் சரி செய்தல் உள்ளிட்ட பணிகளை இப்போதே செய்தால்தான் மழைக்காலப் பாதிப்புகளோடு சேர்த்து கொரோனா பாதிப்புகளையும் எதிர்கொள்ள முடியும்.

எனவே, மருத்துவப்பல்கலைக்கழக அறிக்கையை வெளியிட்டு, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைப்பற்றி தமிழக ஆட்சியாளர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம், ஒரு வேளை ஆளுமையற்ற தமிழக அரசால் எதுவுமே செய்ய முடியாவிட்டால் மக்களாவது தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள முயற்சிப்பார்கள் அல்லவா? என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

click me!