
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார் . இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது . 21 வது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார் , அதில் பேசிய அவர்,
தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக மற்ற மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியது போன்று தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை என என்னிடமே கூறியுள்ளார் . நம் நாட்டின் குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் கூட பிறப்புச்சான்றிதழ் இருக்காது . சிஏஏ சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எதிரானது . இச்சட்டத்தில் உள்ள விதிமுறைகளால் ஒட்டுமொத்த மக்களும் முகாம்களுக்குச் செல்ல வேண்டிய நிலைதான் வரும் . இந்தியாவிற்குள் இனிமேல் அகதிகளாக வருபவர்களுக்கு குடியுரிமை தரமாட்டோம் என கூறலாமே தவிர ஏற்கனவே இந்தியாவில் இருப்பவர்களுக்கு குடியேறிய தரமாட்டோம் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு தரமாட்டோம் என கூறுவது தான் பாசிசம் என்றார்.
அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப்பும் மோடியும் ஒரே சிந்தனை கொண்டவர்கள் என்பதால் அவர் இந்தியாவுக்கு வந்தபோது சிஏஏ சட்டம் குறித்து எதுவும் பேசாமல் சென்றார் , நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது இதைப் பற்றியே மட்டும் மக்களை இந்த அரசு பேச வைத்துள்ளது என்றார். இனிமேல் ஆயுதங்கள் ஏந்தி போராடுவதற்கு பதிலாக உயிரியல் போர்கள் அதாவது (பயோ வார்) மட்டுமே நடக்கும் இதில் ஒன்றுதான் கொரோனா வைரஸ் என்றார். இது மக்களை மட்டுமல்ல நாட்டின் அதிபரையும் பாதிக்கும் என்றார் . முதல்-அமைச்சருக்கு காவிரி காவலன் என்கிற பட்டம் வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான் , எல்லோரும் தமிழர்கள்தான் ஒவ்வொருவரும் மாறி மாறி பட்டம் வழங்கி கொள்ள வேண்டியதுதான் என்றார் .