50 ஆயிரம் கொடுத்தால் அதிக மார்க், தில்லாலங்கடி வேலையில் தனியார் பள்ளிகள்..?? எச்சரிக்கும் மாணவர் அமைப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 15, 2020, 5:10 PM IST
Highlights

மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதை வைத்து அரசுப்பணியில் சேர்வதற்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்களை பதிவு செய்யும்முறை இருந்து வருகிறது. எனவே இந்த முறை வேலைவாய்ப்பு பதிவு செய்வதில் மாணவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டு பதிவு செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும்.

பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் முறையில் குளறுபடி இருப்பதால், மதிப்பீடு முறையை (Grade System) பயன்படுத்தி மாணவர்களின் தேர்ச்சியை வெளியிட வேண்டும் என கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் :- தமிழகத்தில் 2019–2020ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டுமுறை ஒத்திவைக்கப்பட்டு மூன்றாம் முறை ஜூன் 15 அன்று தேர்வு நடைபெற இருந்த நிலையில், கொரோனா நோய் தொற்றின் பரவல் அதிகமாக இருந்ததன் காரணத்தால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ரத்து செய்ய வேண்டும் என்று மாணவ இயக்கங்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சிகள் என அனைவரும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். உயர்நீதிமன்றத்திளும் வழக்கு தொடரப்பட்டு இதுகுறித்தான வழக்கு விசாரணையும் நடைபெற்றது. இதன்படி தமிழக அரசு மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு இந்த கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என்று தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்தான தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்க்கதக்க வகையில் இருந்தபோதும் அதில் சில குளறுப்படிகள் இருப்பதாக கூறப்படுகிறது.  குறிப்பாக பொதுத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்து பிறகு அவர்களின் மதிப்பெண்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் இருந்து 80% சதவிகிதமும், வருகைப்பதிவேடு அடிப்படையில் 20% சதவிகிதமும் எடுத்து கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கூறியிருப்பதனை சில தனியார் பள்ளி நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு மதிப்பெண் அதிகமாக வேண்டும் என்றால் ரூ. 50,000 வரை வழங்க வேண்டும் என்று பெற்றோர்களிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் கல்வி வியாபாரமாக மாற்றப்பட்டு வருகிறது என்பது வெட்டவெளிச்சமாகிறது. எனவே தமிழக அரசு இதுபோன்று பணத்தை பெற்றுக்கொண்டு மதிப்பெண் வழங்கும் கல்வி நிறுவனத்தின் மீது துறை ரீதியிலான கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும், மேலும் பணத்தை கொடுத்து மதிப்பெண் பெற விரும்பும் பெற்றோர்களின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக கேட்டுகொள்கின்றேன். 

தற்பொழுது அரசு அறிவித்துள்ள மதிப்பெண் வழங்கும் நடைமுறையால் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களுக்கு பிடித்த பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளது. இதனால் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. எனவே இந்த நடைமுறை சிக்கல்களை போக்கி மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒளியூட்ட வேண்டியது அரசின் கடமை.அதனைபோன்று, மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதை வைத்து அரசுப்பணியில் சேர்வதற்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்களை பதிவு செய்யும்முறை இருந்து வருகிறது. எனவே இந்த முறை வேலைவாய்ப்பு பதிவு செய்வதில் மாணவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டு பதிவு செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும்.மேலும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தமிழக அரசிற்கு சில கோரிக்கைகளை முன் வைக்கின்றது:- கோரிக்கை : 01) பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை கணக்கிட்டு வழங்குவதில் சில குளறுபிடிகள் நடைபெறுவதால் தமிழக அரசு இதில் நேரடியாக தலையிட வேண்டும். மேலும், அனைத்து மாணவர்களுக்கும் வருகைப்பதிவேடு அடிப்படையில் வழங்கப்படும் 20% சதவகித மதிப்பெண் முழுமையாக வழங்க வேண்டும். மதிப்பெண் வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதினால் 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு மட்டும் மதிப்பீடு முறையை (Grade System) பயன்படுத்தி மாணவர்களின் தேர்ச்சியை வெளியிட வேண்டும். 

 கோரிக்கை : 02) பள்ளிகள் மாணவர்களுக்கான மேற்ப்படிப்பை தீர்மானிக்காமல், மாணவர்களே தங்களுக்கு பிடித்த பாடப்பிரிவை மேற்ப்படிப்பாக தேர்வு செய்து கொள்ளவதற்கு  தமிழக அரசு வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.

கோரிக்கை : 03) கொரோனா ஊரடங்கு காரணத்தால் மாணவர்களின் பெற்றோர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். எனவே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகூடங்களில் பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மேலும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயித்த கட்டணத்தில் இருந்து 50% சதவிகிதம் ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும். 

கோரிக்கை : 04) கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் மனரீதியிலான நெருக்கடிகளில் உள்ளனர். எனவே அரசு அவர்களுக்கு மனநல மருத்துவர்களை கொண்டு கவுன்சிலிங் வழங்க வழிவகை செய்ய வேண்டும். கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் மேற்கண்ட கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும். ஏனென்றால் இன்றைய மாணவர்கள்தான் நம் நாட்டின் நாளைய எதிர்காலம். நம் நாடு வளமும், நலமும் பெற மாணவர்களின் எதிர்காலத்தின் மீதும், ஆரோக்கியத்தின் மீதும், நலனின் மீதும் அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன். என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!