
இந்தி திணிப்பை தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டம் கடந்த 7 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு குழுவின் 37வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பேசிய அமித் ஷா, மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல்கள் இந்தி மொழியிலேயே தயாரிக்கப்படுகின்றன. நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் முக்கிய பகுதியாக, இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். உள்ளூா் மொழிகளுக்கு மாற்றாக இந்தியை மக்கள் கருதக்கூடாது. வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களைச் சோ்ந்த மக்கள், ஒருவருக்கொருவா் தொடா்புக் கொள்ளும் போது பேசும் மொழி, இந்தியாவின் மொழியாக இருக்க வேண்டும்.
பிற உள்ளூா் மொழிகளின் வாா்த்தைகளை ஏற்றுக்கொண்டு நெகிழ்வுத் தன்மையாக மாறாத வரையில் இந்தியை பரப்ப முடியாது. 8 வடகிழக்கு மாநிலங்களில் 22,000 ஹிந்தி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டிருக்கிறாா்கள். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 9 பழங்குடிச் சமூகத்தினா் தங்கள் மொழி வழக்கை தேவநகரி எழுத்துக்கு மாற்றிக் கொண்டுள்ளனா். அலுவல் மொழியிலேயே அரசை நடத்த பிரதமா் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளாா். இதனால், இந்தியின் முக்கியத்துவம் அதிகரிக்கும் என்று தெரிவித்தார். அவரது இந்த கருத்து சர்ச்சையானது. மேலும் இதுக்குறித்து விவாதமும் எழுந்தது.
அமித் ஷாவின் இந்த கருத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தி மொழி திணிப்பை தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவும் இந்தி திணிப்பை விரும்பவில்லை. இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டுமானால் தமிழ் பள்ளிகளை திறக்க மாநில முதல்வர்களுக்கு அரசு கடிதம் எழுத வேண்டும் என்று கூறினார். இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்தை பாஜக வரவேற்கிறது. தமிழ் மொழி இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்பது பாஜகவை பொறுத்தவரை பெருமைக்குரிய ஒன்று என்று தெரிவித்தார்.