பாஜக கூட்டத்துக்கு கூட்டம் வராது என்ற குற்றசாட்டுகள் அத்தனையும் உடைக்கும் வகையில் நேற்று நடந்த பிரச்சார கூட்டம் அமைந்து இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.
மேலும் பாமக, பாஜக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. நடிகர் விஜயின் ‘விஜய் மக்கள் இயக்கம்’ சார்பிலும் விஜய் ரசிகர்கள் போட்டியிடுகின்றனர். மாநில அளவில் இரண்டு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக முடிவு எட்டப்படாததால், தனித்துப் போட்டியிடுவதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
அதேவேளை, பேச்சுவார்த்தைகள் முடிவதற்கு முன்பாகவே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது அதிமுக. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற தமிழக பாஜகவின் அதிரடி முடிவு, இரண்டு கட்சியை சேர்ந்த தொண்டர்களையும் மகிழ்ச்சியடைய வைத்தது. இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, தான் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று ஆறு மாதத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் தற்போது பாஜகவின் வெயிட் என்ன என்பதை அறிய அண்ணாமலை ஆசைப்பட்டுவிட்டதன் விளைவு தான் இதற்கு காரணம் என்கிறார்கள் பாஜகவினர்.
undefined
பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு கட்சிக்கு இளைஞர்கள் உட்பட பலரிடமும் ஆதரவு கிடைத்து வருகிறது. இதனால் பாஜக ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் 30 சதவீத இடங்கள் ஒதுக்குமாறு, அதிமுகவிடம் பேச்சு நடத்தப்பட்டது. அக்கட்சி, 10 சதவீதம் மட்டுமே வழங்குவதாக தெரிவித்தது. தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சு நடத்தினால் கூடுதலாக, 5 சதவீத இடங்களை வழங்க அதிமுக தயாராக இருந்தது.
அந்த இடங்களில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தினாலும், அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு வழங்குவரா என்பது தெரியாது.வரும் லோக்சபா தேர்தலுக்கு முன் கட்சியை பலப்படுத்த, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அதிமுக ஒதுக்கிய இடங்களை ஏற்காமல், பாஜக தனித்து போட்டியிடுவது தான் நல்லது என, மாநில தலைவர் அண்ணாமலை முடிவெடுத்தார்.
இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முதல் பிரச்சாரத்தை தொடங்கினார். அதன்படி இன்று சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளில் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, லோகநாதன் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாஜக கட்சி கூட்டத்துக்கு ஆட்களே வருவதில்லை, அந்த கட்சியில் ஒருத்தருமே இல்லை என்ற குற்றசாட்டுகள் பொதுவாக மற்ற கட்சிகளால் வைக்கப்படுகிறது. இந்த குற்றசாட்டுகள் அத்தனையும் உடைக்கும் வகையில் நேற்று நடந்த பிரச்சார கூட்டம் அமைந்து இருக்கிறது. அதில் அரங்கம் முழுக்க உள்ளேயும், வெளியேயும் பாஜக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பிரம்மாண்டமாய் நிரம்பி இருக்கின்றனர். தற்போது இந்த பிரச்சார கூட்டத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.