
கிழக்கு இந்திய கம்பெனியை அனுப்பிவிட்டு, வடக்கு இந்திய கம்பெனி ஆளுவதற்கா நாம் குடியரசு பெற்றோம்? என்று மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் தெர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். முன்னதாக சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் கட்சி வேட்பாளர்கள் சந்தித்தார். பின்னர் 123, 182வது வார்டுகளில் தேர்தல் பிரசாரத்தில் கமல் ஈடுபட்டர். அப்போது அவர் பேசுகையில், “நாம் தலைவர்களை தேடக் கூடாது. சமூக சேவகர்களைத்தான் தேட வேண்டும். இங்கே ஏழ்மையை இன்னும் தக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதை நீங்கள்தான் நீக்க வேண்டும். பெண்களைப் பொறுத்தவரை பார்ட் டைம்மாக அரசியல் செய்தாலே போதும், நாடு ஃபுல் டைம் நன்றாக மாறிவிடும்.
உங்களை மிரட்டும் ரவுடிகள் கூட்டம் பெரிதாக இருக்கலாம். அது வெறும் கூட்டம் மட்டுமே. ஆனால், இது சங்கமம். ரௌடிகளுக்கு பயம் வர வேண்டும். அது நேர்மையால் மட்டுமே செய்ய முடியும். விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பிக்கொண்டிருக்கும் நாம், மலம் அள்ளும் என் தம்பிக்கு ஓர் இயந்திரம் கண்டுபிடிக்க முடியாதா? ஒரு ரூபாய் சம்பளம் என்று கூறிவிட்டு ஊரை கொள்ளையடிக்கும் பழக்கம் எனக்கி இல்லை. சிலைகள் வைப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. காக்கைக்கு கக்கூஸ் தேவையில்லை. இந்த ஆட்சி திருப்தி இல்லை என மக்கள் சொல்கிறார்கள். ஆளுநர் எங்களை மதிக்க வேண்டும். இங்கே ஏஜெண்டாக செயல்படக் கூடாது. மத்திய அரசு சொல்வதை ஆளுநர் கேட்கிறார்.
கிழக்கு இந்திய கம்பெனியை அனுப்பிவிட்டு, வடக்கு இந்திய கம்பெனி ஆளுவதற்கா நாம் குடியரசு பெற்றோம்? தமிழ்நாட்டை ஒரு போதும் பாசிசம் ஆள கூடாது என்பதே என்னுடைய கருத்து. தலைமைக்காகவும் பதவிக்காகவும் கட்சிக்கு நான் வரவில்லை. தமிழ் நாட்டுக்காகத்தான் வந்துள்ளேன். ஆட்சியைப் பிடிக்க எல்லோருக்குமே ஆசைதான். ஆனால், முதலில் குடுமியை பிடிக்க வேண்டும். பிறகுதான் ஆட்சியை பிடிக்க வேண்டும்” என்று கமல்ஹாசன் பேசினார்.