ஆளுநரை திடீரென்று சந்தித்த பாஜக நிர்வாகிகள்..வெளியான தகவல்..பதற்றத்தில் அறிவாலயம்..?

By Thanalakshmi VFirst Published Jan 7, 2022, 7:49 PM IST
Highlights

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான பாஜக முக்கிய நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்திப்பு பேசினர். நீட் விவகாரம் குறித்து நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு அரசுத் திட்டங்களை நேரடியாகத் தொடங்கி வைக்கப் பஞ்சாப் மாநிலத்திற்குச் சென்றிருந்தார். இந்திய எல்லையோரம் உள்ள  உசைனிவாலா கிராமத்தில் தேசிய சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு, பின்னர் பல்வேறு நலத்திட்டங்களை பெரோஸ்பூரில் துவக்கி வைக்க பிரதமரின் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக பதிண்டா விமானநிலையத்திலிருந்து உசைனிவாலாவிற்கு சாலை வழியாக செல்ல முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் உசைனி வாலாவுக்கு 30 கிலோமீட்டர் முன்பு அங்குள்ள பாலத்திற்கு அருகில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற காரணத்தை காட்டி பிரதமரின் வாகனங்கள் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் அங்கிருந்து பிரதமரின் வாகனங்கள் தொடர்ந்து செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வேறு வழியின்றி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு  பதிண்டா திரும்பினார் பிரதமர். டெல்லிக்கு புறப்படும் முன்பு நான் உயிருடன் வந்து சேர்ந்து விட்டேன் என் நன்றியை உங்கள் முதல்வருக்கு கூறுங்கள் என அங்கிருந்த அதிகாரிகளிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் பாதுகாப்பு பிரோடோகாலில் இது மாபெரும் குறைபாடாகப் பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் போலீசார் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யத் தவறியதாலேயே இந்தச் சம்பவம் நடந்ததாக பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. பஞ்சாப் காங்கிரஸ் அரசைக் கண்டித்து நாடு முழுவதும் பாஜக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. அதன்படி தமிழ்நாட்டிலும் நேற்று போராட்டம் நடந்தது. அப்போது பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, "எங்கள் ஆதங்கத்தை ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்குத் தெரிவிப்போம்" எனத் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் தற்போது தமிழக பாஜக தலைவர்கள் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை சென்னை ஆளுநர் மாளிகையில் சந்திப்பு பேசினர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான இந்தக் குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன், தமிழகத்தின் 4 எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

பஞ்சாபில் பிரதமர் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து இந்தச் சந்திப்பில் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர நீட் விவகாரம் குறித்து நாளை நீட் அனைத்து கட்சி கூட்டம் நடக்கும் நிலையில் அது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவை என்பதை நாளைய நடக்கவிருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்துவார் என்றும் கூட்டத்தில் நீட் சாதகங்கள் குறித்து எடுத்துரைக்கபடும் என்றும் ஆளுநர் சந்திப்பிற்கு பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

click me!