ஆரம்பமானது வெளியேற்ற கூட்டத்தொடர்: இதற்குத்தான் ஆசைப்பட்டாயா தமிழா?

Asianet News Tamil  
Published : Jun 14, 2017, 12:42 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
ஆரம்பமானது வெளியேற்ற கூட்டத்தொடர்: இதற்குத்தான் ஆசைப்பட்டாயா தமிழா?

சுருக்கம்

TamilNadu assembly UPDATE MKStalin other DMK members detained while protesting

மிக மோசமான உட்கட்சி சண்டைகளுக்கு  நடுவில் சட்டமன்ற கூட்டத்தொடரை அறிவித்தது தமிழக அரசு. குடிதண்ணீரில் துவங்கி ஜி.எஸ்.டி. புரிதலின்மை வரை தமிழகத்தை ஆயிரம் பிரச்னைகள் பிய்த்து தின்று கொண்டிருக்கும் நிலையில் சட்டமன்ற  கூட்டத்தொடர் அறிவிப்பு தமிழனுக்கு ஒரு ஆறுதலையும், எதிர்பார்ப்பையும் தந்தது என்பதில் ஐயமில்லை.

சட்டமன்றம் கூடினால் மட்டும் போதுமா! வெளியே நடத்தும் கருத்துச் சண்டையை உள்ளே போடுவீர்களா? என்று பத்திரிக்கைகள் ஆளுங்கட்சியையும், எதிர்க்கட்சியையும் கேட்டபோது, ‘நல்ல விஷயங்கள் நடக்கும்.’ என்று நம்பிக்கையூட்டினார் ஸ்டாலின். எடப்பாடியோ நேற்று அமைச்சரவை கூட்டத்தை கூட்டி சட்டமன்றத்தில் செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதையெல்லாம் பார்த்த தமிழனுக்கு மனதில் ஒரு நம்பிக்கை கீற்று தெறித்தது. சரி எப்படியும், தங்கள் கடமையை செய்ய களமிறங்குவார்கள் என்று நம்பினான்.

ஸ்டாலின் நேற்று தன் எம்.எல்.ஏ.க்களை அழைத்து அவசர கூட்டத்தை நடத்தினார். கூட்டம் முடிந்து வெளியே வந்த பொன்முடி ‘கூட்டத்தில் என்ன ஆலோசித்தோம், முடிவெடுத்தோம் என்பது நாளை சட்டமன்றத்தில் தெரியும்.’ என்று பில்ட் அப்பினார்.

இன்றும் விடிந்தது, சட்டமன்றமும் கூடியது. ஸ்டாலின் சொன்னது போல் என்ன நல்லது நடக்க துவங்கியிருக்கிறது?...ம்ஹூம் ஒன்றுமில்லை. கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக பன்னீர் அணி சரவணன் மறைவு வீடியோவில் சிக்கிய விவகாரத்தை தி.மு.க.வினர் பிடித்துக் கொண்டு ஆட, ஆளுங்கட்சியோ ‘அது கோர்ட்டில் இருக்கிறது. இப்போது பேசுவதற்கு ஒன்றுமில்லை.’ என்று மறுக்க என்று வழக்கமான கூச்சல் குழப்பங்கள்.

இதற்கு நடுவில் அமைச்சர் வீரமணி ஜி.எஸ்.டி.மசோதாவை தாக்கல் செய்து தனது சட்டமன்ற கடமையை நிறைவேற்றியிருக்கிறார். அதை ‘மசோதா சபையில் வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டது.’ என்று ஜெயா டி.வி. பூசணியை சோற்றில் மறைத்திருக்கிறது.

ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் வழக்கம்போல் கோஷம் போட, அதே வழக்கம் போல் சபாநாயகர் அவர்களை வெளியேற்றி இருக்கிறார். ரோட்டுக்கு வந்த ஸ்டாலின் குழு, கர்சீப்பை விரித்து சாலையில் அமர்ந்து தர்ணா எனும் பெயரில் சில நிமிடம் சீன் போட்டுவிட்டு, சாவகாசமாக மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்துவிட்டு, அனுமதி பெறாமல் சாலை மறியல் செய்ததற்காக கைதாகியிருக்கிறார்கள். கூட்டணி கட்சிகளும் இவர்களோடே வெளியேறி, கைதாகியிருக்கிறார்கள். ஆக மொத்தத்தில்  ’வெளியேறும் கூட்டத்தொடர்’ அமர்க்களமாக துவங்கிவிட்டது.

ஆக இவ்வளவு அருமையான, புதுமையான, கடமை தவறா செயல்பாடுகளுடன் இன்றைய சட்டப்பேரவை பணியை இனிதே முடித்திருக்கின்றன.

எதிர்கட்சிகளின் எந்த இம்சையுமின்றி ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கேண்டிலிருந்து மசால்வடை, தேநீர் வாங்கி உள்ளே தள்ளிவிட்டு அடுத்த கட்ட அலுவலுக்கு தயாராவார்கள்.

இந்த பொதுசேவைக்கான சம்பளம், சலுகை, உரிமை அத்தனையும் சற்றும் பிசகாமல் அனைத்து உறுப்பினர்களின் அக்கவுண்டில் செலுத்தப்பட்டுவிடும். சரி, நாம் வழக்கம் போல் காலி குடத்தை எடுத்துக் கொண்டு தெருத்தெருவாக அலையலாம் வாருங்கள்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் தமிழா?

PREV
click me!

Recommended Stories

தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?
ஓபன் சேலஞ்ஜ்-க்கு தயார்..! என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்..!