
தமிழக அரசு கவிழ்க்கப்பட வேண்டும். கலைக்கப்பட வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறினார்.
சட்டமன்றத்தில் பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதாம் இன்று தொடங்கியது. இதில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எம்எல்ஏ சரவணன் வீடியோ காட்சி குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர் தனபால், திமுகவினரை சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றி உத்தரவிட்டார். திமுகவினரை வெளியேற்றியது, சட்டமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கு மதிப்பளிக்காததை கண்டித்து, கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் உள்ளிட்ட எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர், அவர்களை சட்டமன்றத்துக்கு அழைத்து வந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால், காவல்துறையினரை உள்ளே அழைத்து வந்து, திமுகவினரை அடித்து, உதைத்து அனைவரையும் குண்டு கட்டாக தூக்கி வெளியே போட்டனர். பின்னர் நடந்த வாக்கெடுப்பு மூலம் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனார்.
தற்போது கூவத்தூர் விடுதியில் அடைத்த நேரத்தில் பலகோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டது என அதிமுக எம்எல்ஏக்களான இப்போது சட்டமன்ற அவையில்இருக்கும் கனகராஜ், சரவணன் ஆகியோர் கூறினர். இதுகுறித்த பேட்டி ஆங்கில தொலைக்காட்சியில் கடந்த 2 நாட்களாக வெளியாகியாகி வருகிறது.
இந்த பண பேரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் யார் யாருக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது என அவர்களே சொல்லி இருக்கிறார்கள். பின்னர், சரவணன் அந்த பேட்டியில் கூறியது நான் இல்லை. உடல் என்னுடையதை பயன்படுத்தி கொண்டு, குரலை மாற்று பதிவேற்றம் செய்துள்ளனர் என கூறினார்.
இதுபற்றி சட்டமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தில் கேள்வி எழுப்புவோம். அதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும் என கூறினோம். ஆனால், அதை பற்றி எங்களுக்கு பேச அனுமதிக்கவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என கூறினார்கள்.
காவிரி தண்ணீர் விவகாரம், முல்லை பெரியாறு விவகாரம், நீட் தேர்வு விவகாரம் என அனைத்துக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கூவத்தூரில் குதிரை பேரம் பேசப்பட்டது. பிப்ரவரி 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆனால் எம்எல்ஏ சரவணன் பேட்டி, கடந்த 2 நாட்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த காட்சி சமூக வளைதளங்களில் பரவி வருகிறது. இதுபற்றி எந்த வழக்கும் நாங்கள் நீதிமன்றத்தில் தொடரவில்லை. அதனால் நாங்கள், சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினோம்.
தற்போது மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும். கவிழ்க்கப்படவேண்டும். இதற்கு சபாநாயகர் தனபால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடியோ காட்சிகள் குறித்து சரவணன் விளக்கம் அளிக்க வேண்டும்.
இதை பார்க்கும்போது, மீண்டும் இந்த ஆட்சி சர்வாதிகார தன்மையோடு நடக்கிறது என்பதே சாட்சி.
இவ்வாறு அவர் கூறினார்.