
எம்எல்ஏ சரவணன் வீடியோ விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என கூறியதால், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்ல்ஏ சரவணன் வீடியோ குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
அதற்கு, அதுதொடர்பாக திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால், அதுபற்றி பேச முடியாது என சபாநாயகர் தனபால், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இதனை கண்டித்து திமுகவினர் தொடர்ந்து கூச்சலிட்டனர். இதனால், சட்டமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மு.க.ஸ்டாலின், துரைமுருகன், குமார் ஆகியோரை வெளியேற்றப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இதையடுத்து 3 பேரும் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினர்.
இதைதொடர்ந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சட்டமன்ற வளாகத்தின் முன்பு ராஜாஜி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், சட்டமன்றத்தில் உள்ள அனைத்து திமுக உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.