#BREAKING தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன... தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு..!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 26, 2021, 4:43 PM IST
Highlights

இந்நிலையில் இன்று மாலை சரியாக 4.30 மணிக்கு டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களைச் சந்தித்தார். 

​தமிழகத்திற்கான சட்டமன்ற தேர்தல் தேதி இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளன. அதே சமயத்தில் 5 மாநிலத்திற்கும் தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்க வேண்டும் என்பதால் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஏற்கனவே நேரில் ஆய்வு நடத்தினர். 

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்தயாரிப்புப் பணிகள், தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் டெல்லியில் இரு தினங்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது. 

அப்போது கொரோனா நேரத்தில் பாதுகாப்பாக தேர்தலை நடத்துவது, பதற்றமான வாக்குச்சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் இன்று மாலை சரியாக 4.30 மணிக்கு டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் சுகாதாரத்துறை உதவியுடன் பிரச்சனைகளை சமாளித்து வருவதாக தெரிவித்தார். தேர்தலை முறையாக நடத்துவதில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் பெரும் பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார். இன்று முதல்  தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். 

click me!