
கொலை மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுகிற ஆள் தான் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கரூரில் பாஜக மாநில செயற்குழு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், இரவு முழுவதும் தனது போன் அடித்துக்கொண்டே இருப்பதாகவும், போனை எடுத்து பேசினால், கொலை செய்துவிடுவோம், எரித்து விடுவோம் என மிரட்டல் வருவதாகவும் தெரிவித்தார். ஆனால் இந்த மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் ஆள் தான் இல்லை எனவும் தமிழக அரசியல் சூழல் வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார்.
நாகரீகமான விமர்சனங்களை வரவேற்பதாகவும் மோடி போன்ற ஒரு மாபெரும் தலைவரை அநாகரீகமாக விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் மெர்சல் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் தமிழிசை தெரிவித்தார்.