
விடுதலை சிறுத்தைகள் கட்சியை அரசியல் களத்திலிருந்தே அப்புறப்படுத்தப்பட வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்.
மெர்சல் திரைப்பட விவகாரத்தில், விஜயை மிரட்டி பாஜக வளைத்துப் போட பார்க்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விஜயை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் வளைத்துப் போடுவது மிரட்டி நிலங்களை அபகரிப்பது எல்லாம் திருமாவளவனின் வேலை என விமர்சித்திருந்தார்.
தமிழிசை சவுந்தரராஜனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவபொம்மை எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திவந்தனர். இந்நிலையில், இன்று காலை கரூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடந்த அரங்கம் அருகே தமிழிசைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாஜகவினருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதான ஆதங்கத்தை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தனது டுவிட்டர் பக்கத்தில் கொட்டியுள்ளார்.
கட்டப்பஞ்சாயத்து, வன்முறை, ரெளடித்தனம் இவைதான் விடுதலை சிறுத்தைகளின் அடையாளம் எனவும் தமிழக அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனவும் எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.