
நடிகர் விஷாலின் வீடு மற்றும் அலுவலகத்தில் ஜிஎஸ்டி வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பதை சர்வாதிகாரப் போக்கு என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
மெர்சல் திரைப்பட விவகாரத்தில் படக்குழுவினருக்கு ஆதரவாக நடிகர் சங்க பொதுச்செயலாளரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் குரல் கொடுத்திருந்தார். மேலும் மெர்சல் படத்தை இண்டர்நெட்டில் பார்த்ததாக கூறிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என விஷால் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், விஷாலின் வீடு மற்றும் வடபழனியில் உள்ள அவரது அலுவலகத்தில் ஜிஎஸ்டி வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைத்துறையினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக முதன்மை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், விஷால் வீட்டில் நடத்திய சோதனையில் உள்நோக்கம் உள்ளதாகவும் எமர்ஜென்சி சமயத்தில் கூட இதுபோன்ற சர்வாதிகாரப் போக்கு நடைபெறவில்லை என பாஜகவை விமர்சித்துள்ளார்.