
கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேமுதிக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு 2000 கோடி ரூபாயை நிலுவையில் வைத்துள்ளது.
நிலுவைத் தொகை வழங்கப்படாததால், விவசாயத்திற்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர். எனவே சர்க்கரை ஆலைகளிடமிருந்து நிலுவைத் தொகையை பெற்றுத்தர வேண்டும் எனக்கோரி கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இதுவரை கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை வழங்கப்படவும் இல்லை. அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், நிலுவைத் தொகையை பெற்றுத்தர வலியுறுத்தி கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக தேமுதிக சார்பில் விஜயகாந்த் தலைமையில் விழுப்புரத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தேமுதி தொண்டர்களும் விவசாயிகளும் கலந்துகொண்டனர்.