
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்குப் பின்னால் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பதற்காக 15 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. நினைவிட வடிவமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஜெயலலிதா நினைவிட வடிவமைப்பை பொதுப்பணித்துறை இறுதி செய்துவிட்டது.
இதையடுத்து ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
பணிகள் எப்போது தொடங்கி எப்போது முடிக்கப்படும் என்பன போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.