பிரதமரைக் கொச்சைப்படுத்திட்டிங்க... கண்ணியமும், நாகரிகமும், பண்பாடும் வேண்டாமா? தமிழிசை உருக்கம்...

First Published Apr 13, 2018, 11:14 AM IST
Highlights
tamilisai Said This struggle is against sovereignty


பிரதமரைக் கொச்சைப்படுத்திட்டிங்க... கண்ணியமும், நாகரிகமும், பண்பாடும் வேண்டாமா? தமிழகத்தில் நடைபெற்ற கறுப்புக் கொடி போராட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது’ என தமிழிசை கூறியுள்ளார்.

இந்தியப் பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று  சென்னை வந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் ஒன்றிய அரசு தாமதப்படுத்துவதாகக் குற்றம்சாட்டிவரும் எதிர்க்கட்சிகள், மோடிக்கு எதிராகக் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தன.

இதேபோல், பல்வேறு அமைப்புகளும் அவருக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப் போவதாக அறிவித்தன. அதன்படி, பலரும் கறுப்புச் சட்டை அணிந்தும், கறுப்பு பலூன்களை பறக்கவிட்டும், கறுப்புக் கொடி காட்டியும்  எதிர்ப்பைப் காட்டினர். சமூக வலைதளத்தில் மோடிக்கு எதிரான பிரசாரங்கள் உலகளவில் டிரென்ட் ஆனது. 

இந்த நிலையில், பிரதமருக்கு எதிரான போராட்டத்துக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை கண்டனம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “இதுவரை இந்தியாவில் 10 முறை ராணுவக் கண்காட்சி நடைபெற்றுள்ளது. சென்ற முறை பாஜக ஆளும் கோவாவில் நடைபெற்றது. காங்கிரஸ், திமுக ஆட்சி செய்து கொண்டிருந்தபோதுகூட தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் இப்படிப்பட்ட கண்காட்சியை நடத்தியது கிடையாது. வாய்ப்பு கொடுத்த பாரத பிரதமருக்கு நன்றி.

60 நாடுகள் பங்கெடுத்து நம் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு கண்காட்சியைத் திறந்து வைத்ததற்காகப் பிரதமருக்கு நன்றி. ஆனால், அப்படிப்பட்ட நிகழ்ச்சியைத் துவக்கவந்த பாரத பிரதமரைக் கொச்சைப்படுத்தி சில கட்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது கண்டிக்கத்தக்கது. இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இங்கே நடக்கும் போராட்டங்கள் காவிரியைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக அல்ல; விவசாயிகளுக்காகவும் அல்ல; மோடி எதிர்ப்பு மட்டுமே இதில் பிரதானமாக இருப்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல இந்தியாவில் ஒரு வலிமையான பிரதமர் இருக்கிறார் என்றால் தங்களால் வருங்காலத்தில் அரசியலில் பிழைக்க முடியாது என்று நினைக்கும் அயல்நாட்டுச் சக்திகளின் கைக்கூலிகள் இங்கே காவிரியின் பெயரில் போராட்டங்களைத் தூண்டிவிட்டு கண்ணியம் தவறி அரசியல் அநாகரிகமாக நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது. இதே திமுக மற்றும் ஆதரவு கட்சிகளும், தமிழ் உணர்வாளர்கள் என சொல்லிக் கொள்பவர்களும் இலங்கைத் தமிழர்கள் மாண்டு மடியக் காரணமான காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் அவர்களுக்கும், சோனியா அவர்களுக்கும் எத்தனை முறை கறுப்புக் கொடி காட்டினீர்கள்?

உச்ச நீதிமன்றமே மீண்டும் வரும் 3ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்ததும் இரு மாநிலங்களும் போராட்டம் இன்றி அதுவரை அமைதி காக்க வேண்டும் என்று சொன்ன பிறகும் வேண்டுமென்றே போராட்டம் நடத்தும் இவர்கள்தான் நீதி மன்றத்தை அவமதிக்கிறார்கள்.

காவிரி நதிநீர் உரிமையைத் தான் சுய லாபத்துக்காகத் தொலைத்தவர்கள் அதை வைத்து மூன்று தலைமுறையாகப் பதவி சுகம் கண்டவர்கள், தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது செய்ய தவறியதை தற்போது உச்ச நீதிமன்றமே இறுதித் தீர்ப்பாக வழங்கி இன்னும் சில வாரங்களில் மோடி அரசால் செயல் வடிவம் பெற இருக்கும் சூழலில் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வேண்டுமென்றே தமிழகத்தை ஒரு அரசியல் போர்க்களம் ஆக்கி கொதிநிலையில் வைத்து பொது அமைதியைக் கெடுத்து அதில் குளிர்காய நினைக்கும் கூட்டத்தை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

காவிரி பிரச்சினையில் ஸ்டாலின் மற்றும் அத்துணை தலைவர்களும் சுயநலத்தோடுதான் நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பது நாடறியும்.

நாகரிகத்துக்கும், பொது அமைதிக்கும் இருப்பிடமாகத் தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் எதிர்ப்பு அநாகரிகத்தின் உச்சகட்டமாக காவிரியின் பெயரால் முன்னிறுத்தப்பட்டது, ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நம் மாநிலத்திற்கு வெறும் 1,500 கோடி ரூபாய் பொருள் இழப்பு மட்டுமல்ல; தமிழகத்தின் நற்பெயருக்கே பெரும் களங்கம்.

தமிழகம் ஓர் இழவு வீடு என்று சிலர் சொல்வதைத் தமிழக மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மோடி செல்வாக்கு மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் போராடும் திரைப்படத் துறையினர் கடந்த காலங்களில் தமிழகத்தில் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு எத்தனை முறை திரை அரங்கங்களை மூடினார்கள்? எத்தனை முறை திரைப்படங்களை நிறுத்தினார்கள்?

தமிழகத்துக்கு எந்தவித வளர்ச்சி திட்டங்களுக்கு வந்துவிடக் கூடாது என்ற குறுகிய எண்ணத்துடன் செயல்படும் தமிழ் ஆர்வலர்கள் என்ற போர்வையில் சில தமிழர் விரோத சக்திகளின் கைகளில்தான் இந்தப் போராட்டங்கள் இயங்குகிறது. இவர்களைத் தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கவிட்டால் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க முடியாது. விவசாயிகள், விவசாயம் என்று கூக்குரலிடும் இவர்கள் கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு என்ன நன்மை செய்திருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏழு கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் சில இடங்களில் கறுப்புக் கொடி பிடித்துவிட்டு கறுப்பு சர்வதேச மொழி என்று பெருமை பேசுவோர்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். கறுப்புக் கொடி காட்டுவதிலும் ஒரு கண்ணியமும், நாகரிகமும், பண்பாடும் இருக்க வேண்டும். இதை மீறி எல்லை தாண்டி நடந்துகொள்ளும் தமிழர் விரோதிகளைத் தமிழ் மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

click me!