
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை இன்று தமிழக பா.ஜ.க, தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் திடீரென சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி லக்கானை அவர் அவிழ்த்து விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் தமிழிசை சௌந்தர்ராஜன் என்கிறார்கள். இப்போது தொகுதியில் பணம் தாராளமாகப் புகுந்து விளையாடுகிறது என்று பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ரூ. 20 ஆயிரம் வரை ஒரு வாக்காளருக்கு செலவு செய்யப்படுகிறது என்று கூறப்பட்டு வரும் நிலையில், தங்களால் அதைத் தடுக்க முடியவில்லை என்று பாஜக.,வினர் கூறுகின்றனர். திமுக, அதிமுக., தினகரன் தரப்பினர் என பலரும் ரவுண்டு கட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனராம்.
இதனை தொகுதி மேற்பார்வை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்கின்றனர் என்று தமிழிசை புகார் கூறியுள்ளார். ஏற்கெனவே தொகுதியில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதால், அதனைத் தடுக்க இயலவில்லை என்று கூறித்தான் தேர்தல் தள்ளிப் போடப்பட்டது. இந்நிலையில் அதே போன்றதொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் தமிழிசை. குறிப்பாக டிடிவி தினகரன் அணியினர் அதிகம் செலவழிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் கோரிக்கை விடுத்துள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்.
ஆனால், தொகுதியில் குக்கருக்கு மவுசு கூடியிருக்கிறது என்றும், நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றனர் என்றும், அதனால் ஆளும் தரப்பும் பாஜக.,வும் அச்சம் அடைந்திருப்பதாகவும் கூறியுள்ள தினகரன், நாங்கள் வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காகவே, பாஜக., மூலம் ஆளும் கட்சியினர் இப்படி நாடகம் ஆடுகின்றனர் என்று கூறி வருகிறார்.