
திருமாவளவன் வெளியே உலவுவது சமூகப் பதட்டத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா. இது குறித்து இன்று அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது...
திருமாவளவன் வெளியே உலவுவது சமூக பதட்டத்தை ஏற்படுத்தும் என்பது இதோ நிரூபணம். சீர்காழியில் பா.ஜ.க. வினர் மீது விசிக கொலை வெறி தாக்குதல்.- என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில், டிச.6ம் தேதி நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய திருமாவளவன், பௌத்த விகாரங்களை இடித்துத்தான் கோயில்கள் கட்டப்பட்டதாகக் கூறினார். எனவே கோயில்களை இடித்துவிடவேண்டும், ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் கோயில்களை இடித்து விட வேண்டும் என்று கூறியிருந்தார். இது குறித்த விடியோ செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப் பட்டது. இதனால் கொதிப்படைந்த இந்து அமைப்பினர், திருமாவளவனுக்கு எதிராக பல இடங்களில் புகார்களை பதிவு செய்தனர்.
இந்நிலையில், நான் அந்தப் பொருளில் கூறவில்லை, ஒரு வாதத்திற்காக அப்படிக் கூறினேன் என்று திருமாவளவன் விளக்கம் அளித்தார். ஆனாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருக்கும் இந்துக்களுக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையே கலகம் மூட்டுவதற்காக இவ்வாறு ஒரு பிரசாரத்தை திருமாவளவன் தொடங்கியிருப்பதாக இந்து இயக்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இன்று காலை, திருமாவளவனைக் கண்டித்து நாகப்பட்டினத்தில் பாஜக., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பா.ஜ.க.வினர் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த இடத்தில் போடப்பட்டிருந்த ஸ்பீக்கர் மைக்குகள் உடைக்கப்பட்டன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் இந்தக் கண்மூடித்தனத் தாக்குதலைக் கண்டித்து, பா.ஜ.க.,வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கே மாவட்ட எஸ்.பி., தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
சீர்காழியில் அறவழியில், திருமாவளவனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக.வினர் மீது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதனைக் கண்டித்து, ஹெச்.ராஜா இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.