
அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து ராமேஸ்வரத்தில் இருந்து நாளை அரசியல் பயணத்தை தொடங்குகிறார் கமல். அதற்காக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை சந்தித்து கமல் வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில், கமல்ஹாசனை அவரது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சீமான் சந்தித்தார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய சீமான், எங்கள் மண்ணின் மைந்தன் கமல், அரசியலுக்கு வருகிறார். சிறு வயதிலிருந்து அவரை பார்த்து ரசித்து வளர்ந்தவன் நான். அவரது அரசியல் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள். புரட்சிகர மற்றும் வெற்றிகரமான அரசியல் பயணமாக இருக்க வாழ்த்துக்கள் என சீமான் தெரிவித்தார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தி கூறினார். மேலும் தமிழ் வாழ வேண்டும் என்றால் தமிழன் தான் ஆள வேண்டும் என வைரமுத்து கூறியுள்ளார். அதைத்தான் நானும் கூறுகிறேன். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என சீமான் தெரிவித்தார்.
ஏற்கனவே ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக எதிர்த்துவரும் சீமான், இந்த பதிலின்மூலமாக மீண்டும் ஒருமுறை ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக எதிர்த்துள்ளார்.