
நாளை அரசியல் பயணத்தை தொடங்கும் கமலை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார்.
அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து ராமேஸ்வரத்தில் இருந்து நாளை அரசியல் பயணத்தை தொடங்குகிறார் கமல். இந்நிலையில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை சந்தித்து கமல் வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமலின் இல்லத்தில் சீமான் சந்தித்தார்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய சீமான், சிறு வயதிலிருந்து கமலின் ரசிகராக இருந்து வளர்ந்தவன் நான். ஏதாவது மாற்றம் நிகழ்ந்துவிடாதா என மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர். அரசியல் பயணத்தை தொடங்கும் அவர், ஒவ்வொரு தலைவராக சந்தித்து வாழ்த்தை பெற்றார் கமல். என்னை சந்திக்க நேரம் கேட்டார். அவர் என்னை சந்திப்பது சரியாக இருக்காது. நான் வந்து பார்ப்பது தான் சரி என்பதால் நானே வந்து சந்தித்தேன். கமலின் அரசியல் பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். புரட்சிகர மற்றும் வெற்றிகரமான அரசியலாக இருக்க வாழ்த்துக்கள் என சீமான் தெரிவித்தார். அரசியலில் இணைந்து செயல்படுவது குறித்து காலம்தான் தீர்மானிக்கும் எனவும் சீமான் தெரிவித்தார்.