
நடிகர் கமலஹாசன் மதுரையில் நாளை நடத்தும் அரசியல் கட்சி மாநாட்டில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரவால் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்.எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்…அரசியல் எனக்கு வேண்டாம் என்று தொடர்ந்து சொல்லி வந்த நடிகர் கமலஹாசன், தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை கேட்டார்.இதையடுத்து தனது பிறந்த நாளான நவம்பர் 7 ஆம் தேதி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதை உறுதிப்படுத்தினார் கமல். நாளை முதல் தனது அரசியல் பயணத்தைத் தொடங்குவதாக கமல் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி சேஷன் , விஜயகாந்த், போன்றவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் இருந்து நாளை தனது அரசியல் பயணத்தை தொடங்கும் கமலஹாசன், ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
மாலை மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கமல் தனது கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, கொள்கைகளை வெளியிடுகிறார். இந்தமாநாட்டில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசுகிறார்.