
234 தொகுதிகளிலும் ரஜினி தனித்துப் போட்டியிடுவார் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார் . நீண்டகாலமாக அரசியலுக்கு வரப்போகிறேன் என கூறிவந்த நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை நிறைவு செய்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சி அறிவிக்க காத்திருக்கிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் எழுத்தாளர்கள் , பேச்சாளர்கள் , ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் ரஜினிக்கு ஆதரவாக பேசி வரும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா திருப்பூரில் நடைபெற்றது , அப்போது பேசிய தமிழருவி மணியன் , தற்போது உள்ள சூழ்நிலையில் நாடு எங்கே போகிறது என்று அனைவரும் சிந்திக்க வேண்டும் . காமராஜரின் ஆட்சியை கண்கூடாகப் பார்த்தவன் நான், அப்படிப்பட்ட நான் ரஜினியை ஆதரிப்பதும் இயன்றவரை அவரை முதல்வராக்க வேண்டும் என முயற்சித்து எனது அறிவை ஆற்றலை பயன்படுத்துவது எதற்காக என்று அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றார். அதாவது ஆட்சி நாற்காலியில் அமர வேண்டியவர்கள் துறவியைப் போல இருக்கவேண்டும்.
பொதுச் சொத்தில் கை வைக்காதவராக இருக்க வேண்டும் , அதற்கு ரஜினி முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்பது எனது ஆசை , ரஜினி அரசியலில் குதித்தால் ரஜினி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டார், 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட யோசிக்கிறார் அவர். ஆன்மீக அரசியல் ரஜினியின் அரசியல் , ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும் அதிமுக திமுக இரண்டு கட்சிகளும் வீட்டுக்கு போகவேண்டியதுதான் . இரண்டு கட்சிகளுக்குமே எந்த வேறுபாடும் இல்லை என ஆவர் தெரிவித்தார்.