ஆக்சிஜன் உற்பத்தி மையத்திற்காக திரள்நிதி திரட்டிய தமிழ் யுடியூபர்கள்.! அரசு மருத்துவமனைக்கு அர்ப்பணிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Jun 1, 2021, 11:41 AM IST
Highlights

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் உள்ள உயிர்காக்கும் ஆக்சிஜன் உற்பத்தி மையத்திற்காக நிதி திரட்டும் பணி நடந்து வருகிறது. 

இணைய வெளியில் நாம் அனைவரும் அதிகம் பயன்படுத்தும் காணொளி தளம் யூடியூப். தமிழ் படைப்பாளிகள் யூடியூபில் கணிசமாக உள்ளனர். தற்பொழுது தொலைக்காட்சிகளை காட்டிலும் மக்களுக்கு அதிகம் செய்திகளையும் பொழுதுபோக்குகளையும் கொண்டு சேர்ப்பவர்கள் தமிழ் யூடியூபர்களாகத்தான் உள்ளனர். இவை மட்டுமின்றி இவர்கள் சமூக சேவைகளிலும் ஈடுபடுகின்றனர்.
 
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் உள்ள உயிர்காக்கும் ஆக்சிஜன் உற்பத்தி மையத்திற்காக நிதி திரட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப்பணியை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் , ரோட்டரி பிரைட் (Rotary Pride) என்ற அமைப்பும் இணைந்து செய்துகொண்டிருக்கிறார்கள். 

எனவே இவர்களுக்கு உதவும் விதமாக,  தமிழ் மக்களுக்கு மத்தியில் பிரபலமடைந்துவரும்  25க்கும் மேற்பட்ட யூடியூபர்களை ஒருங்கிணைத்த தமிழ் இணைய படைப்பாளிகள் சங்கம்  (Tamil Digital Creators Association) எனும் அமைப்பு. , பிரமாண்ட தொடர் நேரலை மூலம் திரள்நிதி திரட்டலில் ஈடுபட்டது. (Crowdfunding)

கடந்த மே மாதம் 30ஆம் தேதி மாலை 5 மணி முதல் 11 மணி வரை திரள்நிதி திரட்டலுக்காக "We For O2"  எனும் இத்தொடர் நேரலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் கந்தூரி அவர்கள் மற்றும் Rotary Pride 'அன்பரசு' ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் பின்னர் 'நிகர் கலைக்குழு' பறையிசைத்து வரவேற்றது, இதனைத்தொடர்ந்து ஆந்தங்குடி இளையராஜா பாடல் பாடினார். ஏப்பம்பட்டி அணி , பாப்பம்பட்டி அணி என யூடியூபர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து பாட்டுக்கு பாட்டு, Dumb Charades, Answer or Dare போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டனர். 

இந்த நேரலையில் பத்திரிகையாளர் 'யூடர்ன்' ஐயன் கார்த்திகேயன், 'பிஹைண்ட்வுட்ஸ்' ஆவுடையப்பன், 'பிளாக் ஷீப்' டியூட் விக்கி, மதன் கௌரி, 'அரண் செய்' ஹசீஃப், 'பிலிப் பிலிப்' குருபாய் , 'ஜிப்ஸி ஜின்ஸ்' கௌதமி, மாரீஸ் , 'டெம்பிள் மங்கீஸ்' விஜய் வரதராஜ், 'பிலிப் பிலிப்' சர்வ்ஸ் சகா, 'ஜிப்சி ஜின்ஸ்' பென்னி , 'மஞ்ச நோட்டீஸ்' ஜென்சன் திவாகர் , 'ஃபேக் ஐடி' அரவிந்த், 'பிளாக் ஷீப்' ஆர்ஜே.விக்னேஷ்காந்த், 'Mr.GK' தர்மதுரை, மிர்ச்சி சபா, 'நீ யார்டா கோமாளி' பிபியன், ஆர்ஜே ரமணா ஆகியோர் பங்கேற்றனர்.    

இந்த பிரமாண்ட திரள்நிதி திரட்டல் மூலம் 22 லட்சம் ரூபாய், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையின் ஆக்சிஜன் மையத்திற்காக திரட்டப்பட்டது. இதற்குமுன்பு இந்திய அளவில் உள்ள பல்வேறு யுடியூபர்கள் இணைந்து நடத்திய திரள்நிதி திரட்டலில் கூட 40 - 50 லட்சம் ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

click me!