உதவாத செயல்களை விட்டுவிட்டு உருப்படியான செயலை செய்யுங்க.. முதல்வரை பங்கம் செய்த சசிகலா..!

By vinoth kumarFirst Published Dec 3, 2021, 2:37 PM IST
Highlights

 தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரிந்துதான் நடக்கிறதா? இல்லை அவருக்குத் தெரியாமலேயே ஏதாவது ஒரு அதிகார மையத்தின் தலையீட்டால் நடக்கிறதா? அல்லது அரசு இயந்திரம் முதல்வரின் கட்டுப்பாட்டிலே இல்லையா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் சாமானிய மக்களுக்குத் தொடர்ந்து எழுவதாகச் சொல்கிறார்கள்.

தமிழக அரசு, தமிழ்ப் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றம் செய்கின்ற முயற்சியை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான செயல்களில் தங்கள் நேரத்தைச் செலவழித்து மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களை வழங்க வேண்டும் என முதல்வருக்கு சசிகலா கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட 21 பொருட்கள் வழங்கும் பரிசு தொகுப்புக்கான கைப்பை சமூக ஊடங்களில் வெளியானது. அதில், பொங்கல் வாழ்த்து மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயரிலும் தமிழக அரசின் முத்திரையுடன் அந்த கைப்பை இருந்தது. இதனையடுத்து, தமிழ்ப் புத்தாண்டு மீண்டும் தை முதல் தேதிக்கு மாற்றப்பட்டுவிட்டதா என்ற கேள்வி  அனைவரின் மத்தியில் எழுந்தது. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக திமுக அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில், சமூக ஊடகங்களில் அதிமுக மற்றும் பாஜகவினர் இதுதொடர்பாக விமர்சித்து வருகிறார்கள். இதற்கு சசிகலாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் தை மாதத்திற்கு மாற்றப்போவதாக வரும் செய்திகள் உண்மைதானா? என்ற கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. இது சம்பந்தமாக தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வந்ததாகத் தெரியவில்லை, பின் எதற்காக, இதுபோன்ற செய்திகள் பரப்பப்படுகின்றன என்பது புரியாத புதிராக உள்ளது. அதேபோல், கடந்த வாரத்தில், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் திடீரென்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் வைத்ததாக செய்திகள் வந்தன. பின்னர் மறுநாளே அந்தப் படம் அகற்றப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.

இதுபோன்ற செயல்கள், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரிந்துதான் நடக்கிறதா? இல்லை அவருக்குத் தெரியாமலேயே ஏதாவது ஒரு அதிகார மையத்தின் தலையீட்டால் நடக்கிறதா? அல்லது அரசு இயந்திரம் முதல்வரின் கட்டுப்பாட்டிலே இல்லையா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் சாமானிய மக்களுக்குத் தொடர்ந்து எழுவதாகச் சொல்கிறார்கள்.

தமிழ்ப் புத்தாண்டு எதற்காக சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகிறது என்பதற்கு சரியான விளக்கத்தைப் பல்வேறு ஆதாரங்களுடன் அன்றே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து இருக்கிறார். அதைச் சரியாகப் புரிந்து கொண்டாலே போதும். மக்களைக் குழப்புபவர்களும் தெளிவடைவார்கள். எனவே இதுபோன்று மக்களுக்கு உதவாத செயல்களில் அரசு தங்கள் நேரத்தைச் செலவிடுவதைத் தவிர்த்து, குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வழிவகை செய்தாலே போதும். அதுவே மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும். ஆகையால், தமிழக அரசு, தமிழ்ப் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றம் செய்கின்ற முயற்சியை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான செயல்களில் தங்கள் நேரத்தைச் செலவழித்து மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களை வழங்க வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

click me!