எனக்கு சித்திரை 1-இல் தான் தமிழ்ப் புத்தாண்டு... திமுகவை சீண்டிய கார்த்தி சிதம்பரம்.. கொதிக்கும் திமுகவினர்.!

By Asianet TamilFirst Published Jan 13, 2022, 8:39 PM IST
Highlights

தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல் தேதியில்தான் கார்த்தி சிதம்பரம் கொண்டாடுகிறார் என்றால், பொங்கல் வாழ்த்தோடு நிறுத்தியிருக்கலாம். 

எனக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் தேதியில்தான் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியதால், அவருக்கு திமுகவினர் ஆவேசமாக பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
 
தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் தமிழ்ப் புத்தாண்டு தேதி சித்திரை முதல் தேதியிலிருந்து தை முதல் தேதிக்கு மாற்றப்பட்டது. இதன்படி 2009 முதல் 2011 வரை தமிழ்ப் புத்தாண்டு தை முதல் தேதியில் கொண்டாடப்பட்டது. ஆனால், 2011-ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும், திமுக ஆட்சியின் அறிவிப்பை சட்டத் திருத்தம் கொண்டு வந்து மாற்றியது. இதனையடுத்து மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் தேதிக்கு மாறியது. என்றாலும் திமுகவினர் தை முதல் தேதியில் தமிழ்ப் புத்தாண்டு என்று கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்10 ஆண்டுகள் கழித்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததால், தமிழ்ப் புத்தாண்டு தேதி மீண்டும் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

 ஆனால், 2022-ஆம் ஆண்டு அரசு விடுமுறை தினத்தில் சித்திரை முதல் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், திமுக  தன்னுடைய கொள்கையை மாற்றிக்கொண்டுவிட்டது எனப் பலரும் நினைத்தார்கள். ஆனால், பொங்கல் திருநாளையொட்டி திமுக அரசு 21 பொருட்களைக் கொண்ட பரிசுத் தொகுப்பை அறிவித்தது. அதற்கான பரிசு பையில் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே, பையில் அச்சிடப்பட்ட வார்த்தைகள் மீண்டும் மாறின. தமிழர் திருநாள் வாழ்த்துகள் என்று மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொங்கல் திருநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தையும் சேர்த்தே மக்களுக்குத் தெரிவித்தார். இதற்கு பாஜக, அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்தியமைச்சர் எல்.முருகன், “சித்திரை முதல் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என்று அனைவருக்கும் தெரியும்” என்று பதிலளித்திருந்தார். இதற்கிடையே பொங்கல் திருநாளையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வாழ்த்து தெரிவித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், “ அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். எனக்கு தமிழ் புத்தாண்டு சித்திரை 1-ஆம் தேதி அன்றுதான்” என்று கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல் தேதியில்தான் கார்த்தி சிதம்பரம் கொண்டாடுகிறார் என்றால், பொங்கல் வாழ்த்தோடு நிறுத்தியிருக்கலாம். ஆனால், சித்திரை முதல் தேதிதான் எனக்கு தமிழ்ப் புத்தாண்டு என்று கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பதன் மூலம் திமுகவை சீண்டியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. அவருடைய பதிவுக்கு திமுகவினர் ஏராளமானோர் ஆவேசமாகப் பதிவிட்டு விமர்சித்து வருகிறார்கள்.

click me!