மக்கள் பயப்படும்படியாக ஆட்சி நடத்துகிறது திமுக... வீழும் நாள் வெகுதூரத்தில் இல்லை.... ஓ.பன்னீசெல்வம் ஆவேசம்!!

By Narendran SFirst Published Jan 13, 2022, 6:45 PM IST
Highlights

பொங்கல் பரிசு புளியில் பல்லி இருந்ததாக புகார் கூறியவர் மகன் திக்குளித்ததற்கு அரசே காரணம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். 

பொங்கல் பரிசு புளியில் பல்லி இருந்ததாக புகார் கூறியவர் மகன் திக்குளித்ததற்கு அரசே காரணம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆணவம், அகங்காரம், அதிகாரச் செல்வச் செருக்கு ஆகியவை எந்த உருவத்தில் ஆதிக்கம் செலுத்தத் தலை தூக்கினாலும் அந்த ஆதிக்கக் கொடுமையை, அடக்குமுறைப் பிடியினை அடியோடு முறித்தெறியுங்கள் என்றார் பேரறிஞர் அண்ணா. அந்த வகையில், தி.மு.க.வின் அதிகாரச் செல்வச் செருக்கினை முறித்தெறிக்க வேண்டிய கடமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், சாதாரண மக்கள் மீதான தி.மு.க.வின் அடக்குமுறை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு எதிரானதாக உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி பண்டகசாலை நியாய விலைக் கடையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள புளியில் பல்லி இறந்து கிடந்ததை நந்தன் என்பவர் ஊடகங்களுக்குத் தெரிவித்ததன் விளைவாக, இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இது குறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த உலகத்தில் உண்மை பேசுவதை விட உயர்ந்தது வேறொன்றுமில்லை என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க உண்மையை எடுத்துரைத்து இருக்கிறார் நந்தன். இதுபோன்ற தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்குக் காரணம் பிற பகுதிகளில் இதுபோன்று நிகழக்கூடாது என்பதற்காகத்தானே தவிர அரசின் மீது குற்றம் சுமத்துவதற்காக அல்ல.

தி.மு.க. அரசின் மீது குறை கூறுகிறார் என்றால் அதில் உள்ள உண்மைத் தன்மையை ஆய்ந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பதுதான் ஓர் அரசின் ஆக்கப்பூர்வமான செயல். அதைவிடுத்து, குறையை சுட்டிக்காட்டுபவர் மீதே நடவடிக்கை எடுப்பது என்பது உண்மையை மூடி மறைக்க முற்படும் செயல் ஆகும். நந்தன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி என்பதை மீறி அவர் இந்த நாட்டின் குடிமகன்.  இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசு மீது குற்றம் சாட்டுவதற்கும், உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் உரிமை உண்டு. அந்த உரிமையில் தான் பொங்கல் தொகுப்புத் திட்டத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி இருக்கிறார். ஆனால், இவர் மீது ஜாமீனில் வர இயலாத அளவுக்கு ஒரு வழக்கினை திருத்தணி காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். அரசின் திட்டங்களில் உண்மையைச் சொன்ன தனது தந்தை மீது ஜாமீனில் வர இயலாத வழக்குகளை தி.மு.க. அரசு பதவி செய்துள்ளதே என்கிற மன உளைச்சலில், விசாரணை என்ற பெயரில் குடும்பத்தினரை அழைத்து துன்புறுத்துவார்களோ என்ற அச்சத்தில், நந்தனின் மகன் பாபு என்கிற குப்புசாமி தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததையடுத்து, ` முதலில் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தச் செய்தி கேட்டு நான் ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த குப்புசாமிக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு, அவரை இழந்து வாடும் நந்தன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று உயிரை மாய்த்துக் கொள்ளும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். குப்புசாமியின் உயிரிழப்புக்கு ஆளும் தி.மு.க. அரசே காரணம் எனக் குற்றம் சாட்டுவதோடு, தி.மு.க. அரசின் அடக்குமுறைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் பயப்படும்படியாக ஆட்சி நடத்தும் இந்த அரசு வீழும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

click me!