12 ஆண்டுகளாக தொடர்ந்து... மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்... உடனே ஒப்புக்கொண்ட கேரள முதல்வர்..!

By Thiraviaraj RMFirst Published Jan 13, 2022, 6:15 PM IST
Highlights

அதன்படி நாளை கேரள மாநிலத்தில் தமிழ் பேசும் மக்கள் அதிகமுள்ள 6 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 அன்று பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக் கோரி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு இன்று கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில், “‘தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் நாளினை பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என்று அறிகிறேன். ஜனவரி 14 ஆம் தேதி, புனிதமான "தை" தமிழ் மாதத்தின் முதல் நாளாகும்; ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 15 ஆம் நாளினை இந்த 6 மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

​ஆகவே, தமிழ்ச் சமூகங்களிடையே, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14ஆம் நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.’” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஏற்கனவே 15ஆம் தேதி அறிவித்திருந்த உள்ளூர் விடுமுறையை 14ஆம் தேதி அன்று மாற்றி அறிவித்துள்ளார். அதன்படி நாளை கேரள மாநிலத்தில் தமிழ் பேசும் மக்கள் அதிகமுள்ள 6 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தை மாதம் முதல் நாள் அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா தான் பொங்கல் பண்டிகை. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாடு மட்டுமில்லாமல் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அநேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.

click me!