
பெண்களுக்கு எதிரான குற்றம்
தமிழகத்தில் கடந்த சில மாதமாக கூலிப்படைகள் மூலமாக கொலைகள் அதிகரித்துள்ளதாக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்திற்கு பிறகு தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்ற சம்பவம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை திமுக அரசு கட்டுப்படுத்தவில்லையென கூறி வெளிநடப்பு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொலை சம்பவம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தவர், சென்னையில் 3000 ஆயிரம் ரவுடிகள் இருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் கூறியிருப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற 10 மாத காலத்தில் வன்முறை செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறினார். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவுவதாக தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு மோசம்
தமிழக முதல்வரின் இயலாமை காரணமாக சட்ட ஒழுங்கை முறையாக காப்பாற்ற முடியவில்லை என கூறினார். அதிமு க அரசு செயல்படுத்தி வந்த தாலிக்கு தங்கம் திட்டம் , திருமண உதவி திட்டம் , உள்ளிட்ட அதிமுக அரசின் தொலைநோக்கு திட்டங்களுக்கு மாறாக திட்டங்களை திமுக அரசு அறிவித்துள்ளதாக கூறினார். கிராமப்புற ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு ஆடுகள், கறவை மாடுகள் வழங்கும் திட்டங்கள் கைவிடபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அம்மா மினி கிளினிக் திட்டம் , அம்மா ஸ்கூட்டர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை இந்த அரசு கைவிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். சென்னையில் சமூக விரோதிகள் சுதந்திரமாக சுற்றி வருவதாகவும் இதனால் பெண்கள் நடமாட முடியாமல் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை
இந்தநிலையில் தமிழக சட்டபேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்தில் ஹரிஹரன் என்ற நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக தனது கவனத்திற்கு தெரியவந்த நிலையில் உடனடியாக சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் அதன் சிறப்பு அதிகாரியாக முத்தரசி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் எனவும் இந்த வழக்கின் விசாரணை டிஜிபி அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை மற்றும் இதனுடைய தீர்ப்பு ஆகியவை ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் எடுத்துக்காட்டாக அமையும் எனவும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தரப்படும் என உறுதியளித்தார்.