
ஓபிஎஸ் வாக்குமூலம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் ஆஜரான அதிமுக ஒருங்கிணைப்பாளரிடம் இரண்டு நாட்களாக 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. அப்போது 130 கேள்விகளும் ஓ.பன்னீர் செல்வத்திடம் கேட்கப்பட்டது. இதில் முக்கியமாக ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது நடைபெற்ற இடைத்தேர்தல் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதில், மூன்று சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் வேட்பாளரை தேர்வு செய்தது ஜெயலலிதா தான் எனவும், இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் எனவும் கூறியிருந்தார். மேலும் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த போது ஒரு சில முறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா தன்னிடம் தெரிவித்ததாகவும், இதனை சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். இதனையடுத்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நடத்திய குறுக்கு விசாரணையின் போது ஓ.பன்னீர் செல்வம் சசிகலா மீதுள்ள குற்றாச்சாட்டை களைய வேண்டும் என்பதற்காக தான் ஆணையம் அமைக்கவேண்டும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை, பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான், நான் இந்த கோரிக்கையை விடுத்தேன் என கூறினார். எனவே ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை ஆணையம் களைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் இன்று வரை உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
உண்மையை மறைக்க முடியாது
இந்த நிலையில் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா இன்று காலை சென்னை திரும்பினார். சென்னை தி.கரில் உள்ள வீட்டில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பாகவும், அதிமுகவில் உள்ள தலைவர்களின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவித்தார். ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது சந்தேகம் இல்லை என்று ஓபிஎஸ் கூறியதற்கு, இந்த விவகாரம் கடவுளுக்கு தெரிந்த உண்மை. மக்களுக்கும் தற்போது தெரியவந்துள்ளதாக கூறினார். உண்மை காலதாமதமாக வரலாம் யாராலும், திரையிட்டு மறைக்க முடியாது என கூறினார். மேலும் அதிமுகவில் தங்கள் தலைமையை ஏற்பது தொடர்பாக எந்த தகவலும் இல்லாமல் உள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், அதிமுக மூத்த தலைவர் கண்டுகொள்ளாமல் இருப்பதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்தவர், எம்ஜிஆர் மறைவின் போது ஜெயலலிதா உள்ளிட்ட நாங்கள் தனியாகத்தான் இருந்ததாக கூறினார். இதனையடுத்து தான் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்ததாக கூறினார். எனவே இதில் தனக்கு ஏற்கனவே அனுபவம் உள்ளதாகவும் தெரிவித்தார். எனவே இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என தெரிவித்த சசிகலா, தொண்டர்கள் தான் அதிமுகவின் ஆணி வேர் என கூறினார்.
உண்மையை தான் கூறினார் ஓபிஎஸ்
ஆறுமுக சாமி ஆணையத்தில் ஓபிஎஸ் சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் இன்று வரை உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர் உண்மையை தான் ஓ.பி.எஸ் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே இந்த விவகாரத்தில் சசிகலா தரப்பு மகிழ்ச்சியில் உள்ளதாகவே கூறப்படுகிறது. மேலும் சசிகலா தொடர்பாக யாராவது பேசினாலே கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தற்போது ஓபிஎஸ் கருத்து சசிகலா ஆதரவாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.