மோடியே தமிழக அரசை பாராட்டியுள்ளார்.. தமிழகம் விரைவில் தொற்றில்லாத மாநிலமாக உருவெடுக்கும்.. அமைச்சர் பெருமிதம்.

By Ezhilarasan BabuFirst Published May 31, 2021, 12:16 PM IST
Highlights

தமிழகம் விரைவில் தொற்றில்லாத மாநிலமாக உருவெடுக்கும். தமிழகத்தில் 269 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் உள்ளது. துவக்க காலத்தில்  பணிச்சுமை காரணமாக பரிசோதனை முடிவு வெளியாவதில் தாமதமானது

தமிழகம் விரைவில் தொற்றில்லாத மாநிலமாக உருவெடுக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரி வளாகத்தில் 120 படுக்கைகள் கொண்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், 

சென்னையில் முதல் மையமாக120 படுக்கைகளுடன் கூடிய யோகா மற்றும் இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 11 இடங்களில் யோகா மற்றும் இயற்கை கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் 3 வார காலத்தில் 50 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மக்களிடையே கொரோனா சிகிச்சைக்கு சித்தா மற்றும் இயற்கை மருத்துவ வழிமுறைக்கு வரவேற்பு உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகம் விரைவில் தொற்றில்லாத மாநிலமாக உருவெடுக்கும். தமிழகத்தில் 269 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் உள்ளது. துவக்க காலத்தில் பணிச்சுமை காரணமாக பரிசோதனை முடிவு வெளியாவதில் தாமதமானது. கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதில் தற்போது பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளி வருகிறது. 

எங்கேனும் பரிசோதனை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால் புகார் தெரிவித்தால் சரி செய்யப்படும் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். முன்கள பணியாளர்களை பாராட்டும் வகையில் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கோவையில் நேற்று முதலமைச்சர் பிபிஇ கிட் அணிந்து கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் இடத்திற்கு சென்றார். தமிழகம் முழுவதும் போதுமான ஆம்பூலன்ஸ்கள் உள்ளது. சென்னை மாநகராட்சியின் கார் ஆம்பூலன்ஸ் திட்டத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.  

click me!