உத்தரபிரதேசத்தின் சாதனையை தமிழகம் முறியடிக்கவேண்டும்.. உற்சாகப்படுத்தும் ராமதாஸ்..!

By vinoth kumarFirst Published Sep 13, 2021, 3:24 PM IST
Highlights

தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் மூலம் 28.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். தமிழக அரசுக்குப் பாராட்டுகள்.

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை தமிழ்நாடு அரசு நடத்தி வரும் நிலையில் அதற்கு ஏற்ற வகையில் தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளி, கல்லூரிகள், விமான நிலையம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணிவரை நடந்தது. இதையடுத்து நேற்று காலை முகாம் தொடங்கியதும் பொதுமக்கள் ஆர்வாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தமாக 28 லட்சத்து 36 ஆயிரத்து 776 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில், அதிகபட்சமாக சென்னையில் 1,85,370 பேருக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தமிழக அரசின் இந்த சாதனையை அரசியல் தலைவர்கள் முக.ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் மூலம் 28.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். தமிழக அரசுக்குப் பாராட்டுகள்.

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் வாராவாரம் நடத்தப்பட வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் ஒரே நாளில் 33.42 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டதுதான் இந்திய அளவில் சாதனையாக உள்ளது. அந்தச் சாதனையை தமிழ்நாடு அரசு விரைவில் முறியடிக்க வேண்டும். 

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை தமிழ்நாடு அரசு நடத்தி வரும் நிலையில் அதற்கு ஏற்ற வகையில் தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும். கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாவது தவணைக்கான கால இடைவெளியை  குறைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 

click me!