தமிழக பாதுகாப்பு பிரதமரின் கையில்..? "அஜித் தோவாலுடன் நேரடி தொடர்பில் டிஜிபி" பத்திரிக்கையாளர் பகீர்.

Published : Dec 10, 2021, 02:13 PM IST
தமிழக பாதுகாப்பு பிரதமரின் கையில்..? "அஜித் தோவாலுடன் நேரடி தொடர்பில் டிஜிபி" பத்திரிக்கையாளர் பகீர்.

சுருக்கம்

அதாவது ஒவ்வொரு மாநில டிஜிபியும் அந்த மாநிலத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.? மத்திய அரசிடம் இருந்து என்ன உதவிகளை எதிர்பார்க்கிறீர்கள்.? ஒருவேளை உங்கள் மாநிலம் இன்னொரு நாட்டின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாநிலமாக இருப்பின் என்ன மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.? உங்கள் மாநில எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு எது.? 

தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தொடர்பில் இருப்பதாக பிரபல பத்திரிக்கையாளர் ஆர். ராஜகோபாலன் கூறியுள்ளார்.  நவம்பர் 20ஆம் தேதி டிஜிபிகள் மாநாட்டில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவுடன் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பேசினார் என்ற தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், மூத்த பத்திரிக்கையாளர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழகத்தில்  எப்படியேனும் கால் பதிக்க வேண்டும் என்ற பகீரத முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது அதற்கான பல்வேறு நடவடிக்கைகள் பாஜக தேசியத் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில்  தமிழகத்தின் பாதுகாப்பில் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் கவனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இதன் பின்னணியில் தான் காவல்துறையை பின்னணியாக கொண்ட  ஆர். என் ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.   ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று நான்கு மாதங்கள் ஆன நிலையில் ஆளுநர் நியமனம் நடைபெற்றது. காவல் துறையில் குறிப்பாக உளவுத்துறை செயல்பாடுகளில் நீண்ட நெடிய அனுபவம் பெற்ற  ஆர்.என் ரவி தமிழக ஆளுநரானார். தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியவர் அவர் என்பதால், அதன் அடிப்படையில்தான் அவரை தமிழகத்தின் ஆளுநராக மத்திய அரசு தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நிலவிவந்த வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வந்ததில் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு முக்கிய பங்கு உண்டு. வடகிழக்கு மாநிலத்தில் ஆயுதமேந்தி கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை சரண் அடையச் செய்து, அவர்களை அமைதி பாதைக்கு திருப்பியவர் ஆர்.என்.ரவி என்பது அவரது சாதனை வரலாறு.  குறிப்பாக பயங்கரவாத ஒழிப்பு, உளவுத்துறை தகவல்களை சேகரிப்பது, சர்வதேச ஒத்துழைப்பு பெறுவதில் மிகச் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர் அவர் என்றும் கூறப்பட்டது. அதாவது தமிழகத்தின் அருகாமையிலுள்ள இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதன் விளைவுகளை கவனத்தில் கொண்டு மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் ஏற்கனவே பாதுகாப்பு வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஆளுநர் ரவி நியமனத்தை அரசியல் உள்நோக்கம் கொண்டது என திமுக கூட்டணி காட்சிகள் விமர்சித்ததையும் அனைவரும் அறிவோம். இதற்கிடையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக காவல்துறை டிஜிபி சந்தித்து பேசிய புகைப்படங்களும் வெளியாகி அப்போது பேசுபொருளானது.

இந்நிலையில் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த டிஜிபி மாநாடு அதிகவனம் பெற்றுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உரையை மோடி அமித்ஷா போன்ற தலைவர்களே பாராட்டி தாகவும் கூறப்படுகிறது. அந்த மாநாட்டில் பிரதமர் மோடி தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை தனிப்பட்ட முறையில் பேசினார் என்றும் அப்போது மோடியுடன் சைலேந்திரபாபு புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்றும் சைலேந்திரபாபுவில் சைக்கிளிங்கை தான் சமூக வலைத்தளத்தில் பார்த்து தெரிந்து கொண்டதாகவும், மோடி டிஜியிபை அதற்காக பாராட்டி மகிழ்ந்ததாகவும்  தகவல்கள் வெளியானது. முன்னதாக தமிழக சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு 15 பக்க அறிக்கையை சமர்பித்ததாகவும் கூறப்பட்டது. அந்த அறிக்கை, ஏற்கனவே தமிழக முதல்வரின் ஒப்புதலைப் பெற்ற வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இது தொடர்பாக டெல்லி மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ஆர். ராஜகோபாலன் தனியார் யூடியூம் சேனல் ஒன்றுக்கு கொடுத்துள்ள பேட்டியில் குறிப்பிட்டு பேசியுள்ளார். அதில் பிரதமர் மோடி தமிழக காவல்துறை டிஜிபி சந்திப்பு குறித்து நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு அளித்துள்ள பதில் விவரம் பின்வருமாறு:- டிஜிபிகள் மாநாடு என்பது வருடத்திற்கு மூன்று நாட்கள் நடைபெறும், மத்திய உளவுத் துறையின் இயக்குனர்தான் அந்த மாநாட்டை ஒருங்கிணைக்கிறார்,  முழுக்க முழுக்க உள்நாட்டு பிரச்சினைகளை வைத்து அனைத்து மாநில டிஜிபிகளுடன் கலந்துரையாடுவது தான் அந்த மாநாட்டின் நோக்கம். அந்த உளவுப் பிரிவை முழுவதுமாக கவனித்து வருபவன் என்ற முறையில் கூறுகிறேன், சிறப்பு மிக்க இன்டலிஜென்ஸ் பீரோ ஒருங்கிணைத்த அந்த மாநாட்டில்தான் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு 15 பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இந்த முறை ஒவ்வொரு மாநில டிஜிபியும் தனிப்பட்ட முறையில் நரேந்திர மோடிக்கு அறிக்கை கொடுத்துள்ளனர். பல்வேறு கேள்விகளை கொடுத்து அதில் பெறப்பட்ட பதில்களே அறிக்கையாக இடம்பெற்றுள்ளது. 

அதாவது ஒவ்வொரு மாநில டிஜிபியும் அந்த மாநிலத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.? மத்திய அரசிடம் இருந்து என்ன உதவிகளை எதிர்பார்க்கிறீர்கள்.? ஒருவேளை உங்கள் மாநிலம் இன்னொரு நாட்டின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாநிலமாக இருப்பின் என்ன மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.? உங்கள் மாநில எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு எது.? சீனாவா, இலங்கையா,? அதேபோல் மாநிலங்களில் நடக்கிற மதமாற்றங்கள்?  மாநிலத்தில் போராளிகளில் ஊடுருவல் நிலை என்ன?  என்பது போன்ற கேள்விகளை முன்வைத்து அறிக்கைகளின் வாயிலாக பதில் பெறப்பட்டுள்ளது. எனவே இதன் அடிப்படையில் தமிழக காவல்துறை டிஜிபியும் அறிக்கை கொடுத்து இருப்பதாக அறிகிறேன், இதுதொடர்பாக நான் சில முக்கிய அதிகாரிகளுடன் பேசியதில் அந்த மாநாட்டில் சைலேந்திரபாபு மிகச் சிறப்பாக செயல்பட்டார் என பிரதமர் மோடியே பாராட்டியதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அந்த மாநாட்டில் சைலேந்திரபாபு கலந்து கொள்வதற்கு முன்பாகவே தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் அது குறித்து தெளிவாக எடுத்துறைத்து உரிய அனுமதி பெற்ற பிறகே அவர் அந்த மாநாட்டில் அந்த அறிக்கை கொடுத்துள்ளார். அந்த மாநாட்டில் பேசியுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளது.

இதேபோல தமிழக ஆளுநராக பதவி ஏற்ற ஆர்.என் ரவி பதவியேற்ற மறுதினமே தமிழக டிஜிபி யை அழைத்து பேசினார் என்பது அனைவருக்கும் நினைவிருக்கும்.  அவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது பிரதமரும், டிஜிபியும் தமிழக பிரச்சினைகள் குறித்து தான் அதிக அளவில் கவலைப்படுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும். அதற்கான பின்னணியில்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் அல்லது அஜித் தோவலின் அலுவலகம் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்னால் அறுதியிட்டு கூற முடியும். இதன் பின்னணியில் தான் இலங்கையில் இந்தியாவின் தூதுவராக இருக்கிற கோபால் பாகலே என்பவர் தமிழக முதலமைச்சரையும், தமிழக ஆளுநரையும், தமிழக டிஜிபியையும் சந்தித்தார். இந்த சந்திப்பின் முழு வடிவம்தான் பிரதமரிடம் சைலேந்திரபாபு கொடுத்த அறிக்கை. இதற்கு மேல் இதை குறித்து நான் வேறு எதுவும் கூற முடியாது. இவ்வாறு அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார். 

 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!