
அதிகாலையில் வீடு புகுந்து கழக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்திற்கு உரியது என்றும், வன்முறையைத் தூண்டும் பழனிசாமி அண்ட் கம்பெனிக்கு ஆதரவாக செயல்படுகிறதா தமிழ்க காவல்துறை? என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி கடற்கரை சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் கடந்த 5 ஆம் தேதி அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க கட்சியைச் செர்ந்த ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது அ.தி.மு.க, அ.ம.மு.க-வினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதற்கிடையே எதிர்கட்சி தலைவரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வந்த கார் மீது சிலர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர். அதனைத் தொடர்ந்து செருப்பு வீச்சு சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க கட்சியைச் சேர்ந்த மாறன் என்பவர் தாக்குத்கல் சம்பவத்திற்கு அ.ம.மு.க-வினர் தான் காரணம் என குற்றஞ்சாட்டி அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் அ.ம.மு.க-வினர் 50 பேர் மீது அண்ணா சதுக்கம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காரை மறித்து வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக திருவல்லிக்கேணி லாக் நகரைச் சேர்ந்தவரும், அ.ம.மு.க 114வது வார்டு பொருளாளருமான மாரியப்பன் (38) என்பவரை அண்ணா சதுக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களையும் தேடி வருவதாகவும், வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் மாரிமுத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்முறையை தூண்டும் பழனிச்சாமி அண்ட் கம்பெனிக்கு ஆதரவாக திமுக போலீஸ் செயல்படுகிறதா? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மெரினா கடற்கரை சம்பவம் குறித்து கழகத்தின் சார்பில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்ட பிறகு முறையான விசாரணை இன்றி அமமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அதிமுகவில் நடக்கும் அதிகார மோதல் சொந்தக் கட்சி தொண்டர்களை குண்டர்களை வைத்து தாக்கும் நிலைக்கே சென்று இருப்பதை நாடறியும். அதையெல்லாம் மறைக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் மீது வீண்பழி சுமத்தி தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்த அதிமுகவினர் முயற்சிக்கிறார்கள் என்பதை நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகளிடமும் கழகத்தின் சார்பில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் முறையான விசாரணை எதுவும் நடத்தாமல் சென்னை மாநகராட்சியில் 114 கிழக்கு வட்ட கழக செயலாளர் திரு.சுதாகர், 114 மேற்கு வட்ட கழகச் செயலாளர் திரு.அற்புதராஜ், 63 தெற்கு வட்ட கழக செயலாளர் மதுசூதனன் ஆகியோரை எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் காவல்துறையினர் இன்று அதிகாலை வீடு புகுந்து கைது செய்திருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமமுக நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். காவல்துறையினர் இப்படி ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வது ஏன்.? உள்நோக்கத்துடன் வன்முறையை தூண்ட முயற்சிக்கும் பழனிச்சாமி அண்ட் கம்பெனிக்கு தமிழக காவல்துறை துணை போவதன் மர்மம் என்ன? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.