அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செம குட் நியூஸ்.. மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு.! அசத்தும் எடப்பாடியார்

By karthikeyan VFirst Published Jun 15, 2020, 5:39 PM IST
Highlights

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் அவசர சட்டத்தை இயற்ற தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 
 

நீட் தேர்வு நடைமுறைக்கு வரும்முன், 12ம் வகுப்பில் மாணவர்கள் வாங்கிய கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்துகொண்டிருந்தது. அதனால் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்களும் அரசு மருத்துவ கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பை பெற்றனர். ஆனால் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதற்கு பின், பல ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு தகர்ந்துவிட்டது. 

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசிடம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்தது. இனிமேல் அதற்கு வாய்ப்பில்லை என்ற நிதர்சனத்தை அறிந்து, மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு ஏற்கனவே எடுத்துவிட்டது.

நீட் தேர்விற்காக தனியாக பயிற்சி மையங்களில் கட்டணம் செலுத்தி படிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. எனவே அரசு பள்ளி மாணவர்கள் பலரது மருத்துவ படிப்பு கனவு தகர்ந்துவிட்டது. அப்படியே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடம் கிடைப்பதில்லை. 

இந்த எதார்த்தத்தை தமிழக அரசு புரிந்துகொண்டுள்ளது. அதனால் தான், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி, 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் ஏற்கனவே அறிவித்திருந்தார். 

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த சாத்தியத்தை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய, முன்னாள் நீதியரசர் கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, தங்களது அறிக்கையை தமிழக அரசிடம் கடந்த 8ம் தேதி தாக்கல் செய்தது. 

அரசு பள்ளி மாணவர்களின் பொருளாதார நிலை, குடும்ப பின்னணி, வாழ்வாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 10% உள் ஒதுக்கீடு வழங்கலாம் என பரிந்துரைத்தது. 

அந்த அறிக்கையை கருத்தில்கொண்டு, தமிழக அரசு சிறந்த முடிவை எடுத்துள்ளது. முதல்வர் தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் அவசர சட்டத்தை இயற்ற தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

இதன்மூலம், சுமார் 350 அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த முடிவை கல்வி ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளதுடன், பாராட்டும் தெரிவித்துள்ளனர். 
 

click me!