தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு மத்திய அரசு உத்தரவிட கோரி தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் தீர்மானம்
தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட மாண்பமை உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட மத்திய அரசை ஒருமனதாக வலியுறுத்திடும் அரசினர் தனித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து பேசிய போது, ஆளும் கட்சியாக இருந்தாலும் - எதிர்க்கட்சியாக இருந்தாலும் - காவிரி நதிநீர் உரிமையைக் காப்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும், எப்போதும் எந்தச் சூழலிலும் உறுதியாக இருக்கும்.
undefined
இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு காவிரி டெல்டா உழவர்களுக்காக மேட்டூர் அணையானது சீராகத் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில், 1 ஜூன், 2023 அன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையில் இருந்த 69.7 டி.எம்.சி நீரளவையும், தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பையும் கருத்தில் கொண்டு, 12.06.2023 அன்று மேட்டூர் அணையை குறுவை பாசனத்திற்காக திறந்து வைத்தோம். மேட்டூர் அணையின் நீர் இருப்பு 50 டி.எம்.சி. க்கும் மேலாக உள்ளபோது, உழவர்கள் பருவத்தே பயிர் செய்ய ஏதுவாக, மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் நாள் திறப்பது வழக்கமாக உள்ளது. அதனை முறைப்படி திறந்து வைத்தோம்.
திறந்துவிடப்பட்ட நீரும் கடைமடைப் பகுதிகள் வரை சென்றடைந்தது. நமது வேளாண் பெருமக்களும் கடந்த ஆண்டுகளைப் போலவே குறுவைப் பயிரை இந்த ஆண்டும் சிறப்பாக பயிரிடுவதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டார்கள். இத்தகைய நிலையில் செயற்கையான ஒரு நெருக்கடியை கர்நாடக மாநில அரசு உருவாக்கி வருகிறது. கர்நாடக மாநில அரசு நமக்கு வழங்க வேண்டிய உரிய தண்ணீரை இந்த மாதத்தில் திறந்து விடவில்லை. கடந்த ஜூன் மாதத்தில் பில்லிகுண்டுலுவில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய 9.19 டி.எம்.சி-க்கு பதிலாக, 2.833 டி.எம்.சி மட்டுமே வரப்பெற்றோம். (இதனை தொடர்ந்து தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை முதலமைச்சர் பட்டியலிட்டார்)
தமிழகத்திற்கு நீரை திறக்க கோரிக்கை
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவர்களுக்கு, 6.10.2023 அன்று எழுதிய கடிதத்தில் கர்நாடகா ஆணையத்தின் உத்தரவைப் பின்பற்றாததை சுட்டிக்காட்டி, ஆணையம் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு 11.10.2023 அன்று அடுத்த கூட்டத்தை நடத்த உள்ளது. அதாவது இன்னும் இரண்டு நாட்களில் நடத்த உள்ளது. இக்கூட்டத்தில், பற்றாக்குறை ஆண்டாகிய 2023-24–இல், ஏற்கெனவே குழு மற்றும் ஆணையம் நிர்ணயித்துள்ள அளவில் கர்நாடகா அளிக்க வேண்டிய நீரளவில் உள்ள குறைபாட்டை ஈடுசெய்யவும், அடுத்த 10-15 நாட்களுக்கு அளிக்கவேண்டிய நீரையும் சேர்த்து வழங்க வலியுறுத்த உள்ளோம்.
மேலும், சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து, தேவைப்படின் தக்க சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டங்களிலும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டங்களிலும், தொடர்ந்து வலுவாக வாதிட்டு வந்துள்ளதால், 2023-2024 பற்றாக்குறை ஆண்டாக இருக்கும் போதிலும் 1.06.2023 முதல் 3.10.2023 வரை பில்லிகுண்டுலுவில் 46.1 டி.எம்.சி நீர் பெறப்பட்டுள்ளது.
மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்
இந்த பாசன ஆண்டு பற்றாக்குறை ஆண்டாக இருந்துவரும் நிலையில், 5.10.2023 வரை, 90.25 டி.எம்.சி. நீர் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம், காவிரி டெல்டாவில் 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக, முறைபாசனம்- Turn system-படி நீர் பங்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் எஞ்சியுள்ள நாட்களுக்கு நாம் நமக்கு உரிய நீரைப் பெற்று, குறுவைப் பயிரையும், அடுத்து நடவு செய்யப்பட உள்ள சம்பா பயிரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, நமது வேளாண் மற்றும் பொதுமக்களின் நலன் காக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி பின்வரும் தீர்மானத்தை இந்த பேரவை நிறைவேற்ற வேண்டும் என்று கோருகின்றேன்.
தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கான மட்டுமல்ல - மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி நீர்! அதனை தமிழ்நாட்டு மக்களுக்குப் பெற்றுத் தருவதில் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டு பெற்றுத் தருவோம். ஒன்றிய அரசானது, இதில் முறையாகச் செயல்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டும். இதற்கான அனைத்துவித முயற்சிகளையும் தி.மு.க. அரசு தயங்காமல் செய்யும் என்று மாமன்ற உறுப்பினர்களுக்கு உறுதி அளிக்கிறேன். அதே உணர்வுடன் இந்தத் தீர்மானத்தை இப்பேரவையின் சார்பில் நிறைவேற்றி தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்
தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட மாண்பமை உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துவதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முதலமைச்சர் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.