
விவசாயிகளுக்கு உரங்கள், இடு பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொது விநியோக திட்டத்தில் நாட்டிலேயே தமிழகம் சிறப்பாக செயல்படுவதாகவும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
சென்னை, கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசியதாவது:
கடந்த 7 ஆண்டுகளில் ரூ.89 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.11,442 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பயிர்க்கடனாக ரூ 78 ஆயிரம் கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2.42 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,552 கோடி கடன் இதுவரை தரப்பட்டுள்ளது.
நாட்டிலேயே பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்படுவது தமிழகம். 272 கிராமங்களில் நகரும் நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பண்ணை பசுமை கடைகள் மூலம் ரூ. 81 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு உரங்கள், இடு பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பா தொகுப்பு நிதி, குறுவை தொகுப்பு நிதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.