டாஸ்மாக் விவகாரத்தில் இனி எந்த சிக்கலும் வந்துடக்கூடாது.. செம உஷாராக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

By karthikeyan VFirst Published May 15, 2020, 5:13 PM IST
Highlights

டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளியை உறுதி செய்யும் விதமாகவும் மதுப்பிரியர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 
 

தமிழ்நாட்டில் 40 நாட்களுக்கு பிறகு கடந்த 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அனுமதியின் பேரில்தான் டாஸ்மாக் கடைகள், கடந்த 7ம் தேதி சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் திறக்கப்பட்டன.

ஆனாலும், இந்த இக்கட்டான சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என எதிர்க்கட்சிகளும் தாய்மார்களும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், வருவாயின்றி தவித்துவரும் அரசு, கட்டாயத்தின் பேரில் டாஸ்மாக் கடைகளை திறந்தது. டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தனிமனித இடைவெளி உறுதி செய்யப்படும் என அரசு உத்தரவாதம் அளித்ததையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை திறக்க தடையில்லை என்று தெரிவித்தது. 

இதையடுத்து கடந்த 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 40 நாட்கள் கழித்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், ஆர்வமிகுதியில், மதுப்பிரியர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கத்தவறி நெருக்கமாக நின்று மதுபானங்களை வாங்கிச்சென்றனர். தனிமனித இடைவெளி பின்பற்றப்படாததற்கான புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தனிமனித இடைவெளி பின்பற்றப்படாதது உறுதியானதையடுத்து, கொரோனா மேலும் வேகமாக பரவும் வாய்ப்பிருப்பதாகக்கூறி, டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உத்தரவிட்டது. 7 மற்றும் 8ம் தேதிகளில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், 9ம் தேதியிலிருந்து மூடப்பட்டன. 

இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில்,  டாஸ்மாக் கடைகளை மூடினால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் நீண்ட நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் கூட்டம் கூடியதே தவிர, இனிமேல் அந்தளவிற்கு கூட்டம் இருக்காது என தமிழக அரசு குறிப்பிட்டிருந்தது. 

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் நாளை முதல் மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியளித்து உத்தரவிட்டது. 

எனவே நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், கூட்ட நெரிசலை தடுத்து தனிமனித இடைவெளியை உறுதி செய்யும் விதமாக ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை 7 நாட்களுக்கும் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் உள்ளிட்ட 7 நிறங்களில் மதுப்பிரியர்களுக்கு டோக்கன் வழங்கப்படவுள்ளது. அந்தந்த நிற டோக்கனுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் சென்று மது வாங்கிக்கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 

click me!