கொரோனா பணியில் மின்னல் வேகத்தில் செயல்படும் தமிழக அரசு.. பாராட்டும் அதிமுக முன்னாள் அமைச்சர்..!

By vinoth kumarFirst Published Jun 12, 2021, 11:34 AM IST
Highlights

கொரோனா பரவலை குறைக்க தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் கொரோனா தொற்று 35 ஆயிரத்திலிருந்து 17 ஆயிரமாக குறைந்திருப்பது நம்பிக்கையை அளிக்கிறது.

முதல்வரின் அறிவிப்பு படி இதனை மக்கள் இயக்கமாக மாற்ற போதுமான தடுப்பூசிகள் இருக்கவேண்டும். அப்போதுதான் மனித உயிர்களை காக்கமுடியும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் பொறப்பேற்றதில் இருந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு 4000 ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதை அதிமுக முன்னாள் அமைச்சர்களே பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில்,  மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி கூடக்கோவிலில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்எல்ஏவுமான ஆர்.பி. உதயகுமார் நேற்று ஆய்வு நடத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கொரோனா பரவலை குறைக்க தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் கொரோனா தொற்று 35 ஆயிரத்திலிருந்து 17 ஆயிரமாக குறைந்திருப்பது நம்பிக்கையை அளிக்கிறது. தொற்றிலிருந்து நாம் முழுவதுமாக விடுபடவேண்டும் என்றால் மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ள கருத்து அரசுக்கு நன்றாக தெரியும். அது தடுப்பூசி ஒன்றுதான். 

நோயிலிருந்து பாதுகாக்கும் ஆயுதம் இதுதான். முதல்வரின் அறிவிப்பு படி இதனை மக்கள் இயக்கமாக மாற்ற போதுமான தடுப்பூசிகள் இருக்கவேண்டும். அப்போதுதான் மனித உயிர்களை காக்கமுடியும். தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி பொதுமக்கள் அனைவருக்கும் கிடைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்  என கூறியுள்ளார்.

click me!