ஆன்லைனில் மது விற்பனை..? சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

By karthikeyan VFirst Published May 6, 2020, 4:22 PM IST
Highlights

ஆன்லைனில் மது விற்பனை செய்வது குறித்த தமிழக அரசின் பதிலை சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

கொரோனாவை தடுக்க ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தது. அதன்படி, மாநில அரசுகள் சில தளர்வுகளை செய்துள்ளன. 

மேலும் ஒயின் ஷாப்புகளை திறக்கவும் மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் மே 7(நாளை) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.

தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய டாஸ்மாக் கடைகளில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கூட்ட நெரிசலை தவிர்த்து தனிமனித இடைவெளியை உறுதி செய்யும் பொருட்டு, காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை 50 வயது மேற்பட்டவர்களும், மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை 40-50 வயதுக்குட்பட்டவர்களும், மதியம் 3 மணி முதல் மாலை 5 மணிவரை 40 வயதுக்குட்பட்டவர்களும் மதுபானங்களை வாங்கலாம் என டைம் பிரித்து உத்தரவிட்டுள்ளது அரசு. 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இதற்கிடையே டாஸ்மாக்கை திறக்க தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது.

அந்த விசாரணையில், தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், மதுபானங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய முடியாது என்றும், டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளியை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தனிநபர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்படுமே தவிர மொத்த விற்பனை செய்யப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!