ரூ.500க்கு 19 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்படும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

By karthikeyan VFirst Published Apr 10, 2020, 9:07 PM IST
Highlights

மளிகை பொருட்களை வாங்க மக்கள் பொதுவெளியில் நடமாடுவதை குறைக்கவும் குறைந்த விலையில் மக்களுக்கு மளிகை பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 
 

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ஊரடங்கு 14ம் தேதிக்கு பிறகும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி நாளை, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

அதன்பின்னர் முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுடன் மாலை 5 மணிக்கு ஆலோசிக்கவுள்ளார். அதற்காக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு கூடுகிறது.  

ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் மளிகை பொருட்கள், காய்கறிகளின் விலை வழக்கத்தைவிட அதிகமான விலைக்கு விற்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் வாங்குவதற்கு சிரமப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்வதாக கூறி பொதுவெளியில் சுற்றித்திரிகின்றனர்.

இந்நிலையில், அதற்காக தமிழ்நாடு அதிரடியாக ஒரு திட்டமிட்டு சிறந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கடுகு, மிளகு, சீரகம் உள்ளிட்ட அத்தியாவசியமான 19 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை ரூ.500க்கு ரேஷன் கடைகளிலேயே விற்பனை செய்யப்படும் எனவும் மக்கள் ரேஷன் கடைகளில் அந்த பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதற்காக டியுசிஎஸ் நிறுவனத்தின் மூலம் மளிகை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது அரசு. இதனால் ஊரடங்கால் வருவாயை இழந்து தவிக்கும் மக்கள், அத்தியாவசியமான மளிகை பொருட்களை ரேஷன் கடைகளில் வாங்கிக்கொள்ள முடியும்.
 

click me!