நிர்மலா சீதாராமனுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை...!! காங்கிரஸ் கட்சியில் துளி கூட பணம் இல்லை...!! டயலாக் பேசிய அழகிரி...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 1, 2019, 1:49 PM IST
Highlights

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார அறிவற்றவர் எனவும், அமித்ஷா மோடியின் அடியாள் எனவும் அப்போது அவர் குற்றஞ்சாட்டினார். 

கோடிக்கணக்கான ரூபாய் பணம் புரளும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் செலவு செய்ய ஒரு பைசா கூட இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

 

கோவை காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம், இந்தி மொழி திணிப்பிற்கு கண்டனம்,  பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் தோல்வியடைந்த பாஜகவை கண்டித்து, அக்டோபர் மாத இறுதியில் போராட்டம், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும், நலிந்து வரும் திருப்பூர் ஜவுளி தொழிலை பாதுகாக்க உற்பத்தியாளர்கள் பெற்ற கடனை வங்கிகள் மறுசீரமைப்பு செய்து தர வேண்டும், திருப்பூரை தலைமையிடமாக கொண்டு ஆயத்த ஆடை உற்பத்திக்கென தனிவாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

இதையடுத்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்தியா ஒரு நாடு கிடையாது எனவும், பல்வேறு மொழி, கலாச்சாரம், கொண்ட நாடுகளின் தொகுப்பு எனவும் தெரிவித்தார். மேலும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்பது சாத்தாயமாகாது எனவும்,  இன்று வரைக்கும் இந்தியா ஒரே நாடாக இருக்க காரணம் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் தான் என்று கூறினார். 
காஷ்மீர் இந்தியாவோடு இணைய காரணம் நேரு கொடுத்த வாக்குறுதி தான் எனவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படாததற்கு நேரு காரணமல்ல, மவுண்ட்பேட்டன் பிரபு தான் காரணம் என்றும் அவர் கூறினார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார அறிவற்றவர் எனவும், அமித்ஷா மோடியின் அடியாள் எனவும் அப்போது அவர் குற்றஞ்சாட்டினார். 

காங்கிரசார் சரியாக செயல்படாததால் தான் பாஜக ஆட்சியில் உள்ளதாக தெரிவித்தார்.நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய, காங்கிரசார் கடுமையாக பாடுபட வேண்டும் எனவும், வாக்குச்சாவடியை கைப்பற்றும் சக்தி இல்லையென்றாலும், காப்பாற்றும் சக்தி காங்கிரசாருக்கு வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு கோடிக்கணக்கான பணம் புரளும் எனவும், காங்கிரஸ் கட்சியில் செலவு செய்ய ஒரு பைசா கூட இல்லை எனவும் கூறிய அழகிரி, காங்கிரஸ் நிர்வாகிகள் கடுமையாக உழைத்து இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றார்.

click me!