தமிழக சட்டமன்ற தேர்தல் ஒத்திவைப்பா?... தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிரடி விளக்கம்..!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 17, 2021, 3:10 PM IST
Highlights

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிப்பது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. 
 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தமிழகத்தில் தலை தூக்கியுள்ள கொரோனா தொற்றின் தீவிரம் தேர்தல் ஆணையத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. எனவே கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிப்பது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. 

பீகாரில் கொரோனா கால கட்டத்தில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் பாதுகாப்பான முறையில் நடத்தி முடிக்கப்பட்டது. எனவே அப்படியொரு இக்காட்டான சூழ்நிலையை கையாண்டது குறித்து ஆலோசிப்பதற்காகவும், அவர்களிடம் இருந்து தேவையான வழிமுறைகளை அறிந்து கொள்வதற்காகவும், பீகாரில் இருந்து 2 சுகாதார அதிகாரிகளை தமிழகத்திற்கு தமிழக தேர்தல் அதிகாரி கேட்டு பெற்றுள்ளார். 

பீகாரில் சுகாதாரத்துறை அதிகாரிகளான சுதிர்குமார், ரோகினி ஆகியோர் தமிழகம் வந்துள்ளனர். முதற்கட்டமாக 2 அதிகாரிகளும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணும் மையங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அதன்பின்னர் தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் பீகாரில் எப்படி கொரோனா பரவலையும் சமாளித்து தேர்தல் நடத்தப்பட்டது, அதற்கான நடவடிக்கைகள், செயல்பாடுகள் என்ன என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சத்யபிரதா சாகு, ‘தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சட்டசபை தேர்தல் ஒத்திவைக்க வாய்ப்பில்லை. பீகார் மாநிலத்தில் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கூட அங்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளோம்’ என தெரிவித்தார்.  

click me!