"தமிழே மூத்த மொழி, சமஸ்கிருதம் இல்லை ".. கங்கனா ரனாவத்தை ஓங்கி அடித்த நாராயணன் திருப்பதி.

By Ezhilarasan BabuFirst Published Apr 30, 2022, 6:52 PM IST
Highlights

தமிழே பழமையான மொழி என்றும், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இருந்து உருவானது தான் சமஸ்கிருதம்  என்றும் கங்கனா ரனாவத்துக்கு தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்

.

தமிழே பழமையான மொழி என்றும், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இருந்து உருவானது தான் சமஸ்கிருதம்  என்றும் கங்கனா ரனாவத்துக்கு தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். நாட்டில் தமிழ் கன்னடத்தை காட்டிலும் பழமையான மொழி சமஸ்கிருதம்தான், எனவே அது தான் நாட்டின் இணைப்பு மொழியாக, ஆட்சிமொழியாக இருக்கவேண்டுமென கங்கனா ரனாவத் கூறியிருந்த நிலையில் திருப்பதி நாராயணன் இவ்வாறு மறுத்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹிந்தி மொழியை தேசிய மொழியாக  அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறியிருந்தார். அவரின் இந்த கருத்து இந்தி பேசாத மாநிலங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள் அமித்ஷாவுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்தித் திணிப்பு முயற்சி நாட்டின் ஒருமைப்பாட்டை கேள்விக்குறியாகிவிடும் என்றும் தமிழகம், கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களை எச்சரித்துள்ளன. இந்த விவகாரம் தற்போது சினிமா நட்சத்திரங்களின் மத்தியில் மோதலாகவும் மாறியுள்ளது. திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கன்னட நடிகர் கிச்சா சுதீஷ், ஹிந்தி ஒன்றும் தேசிய மொழி அல்ல என கூறியிருந்தார்.

இதற்கு இந்தி நடிகர் அஜய் தேவ்கன், இந்தி தேசிய மொழி இல்லை என்றால் எதற்காக கன்னடம், தமிழ் உள்ளிட்ட படங்களை ஹிந்தியில் டப் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன் என்றும் இந்தி தான் தாய்மொழி, நாட்டின்  தேசிய மொழியாக இருக்கும் என்றும் அவர் இந்தியில் பதிவிட்டார். இந்நிலையில் அப்படி ஒன்றும் இல்லை என்று மீண்டும் மறுப்பு தெரிவித்தார் கிச்சா சுதீஷ், நாங்கள் இந்தியை ஆர்வத்தில் படித்துக் கொண்டிருக்கிறோம், நீங்கள் இந்தியில் பதிவு செய்ததை நான் புரிந்து கொண்டேன், ஒரு வேலையை நான் என் தாய்மொழியான கன்னடத்தில் பதில் தெரிவித்திருந்தால் உங்கள் நிலைமையை எண்ணிப் பார்க்கிறேன் என பதிலடி தெரிவித்திருந்தார், மேலும் நாங்களும் இந்தியர்கள் தானே என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது இது தென்னிந்தியா மற்றும் பாலிவுட் நடிகர்களுக்கு இடையேயான மோதலாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அஜய் தேவ்கனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அஜய் தேவ்கன் கூறியதில் என்ன தவறு இருக்கிறது. அவர் சரியாகத்தான் கூறியிருக்கிறார். இந்திக்கு எதிராக பேசுபவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசுகின்றனர் என்று அர்த்தம், இந்தியைகூட விடுங்கள், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளை விட பழமையான மொழி சமஸ்கிருதம்தான். ஆனால் அதை ஏன் நாம் இணைப்பு மொழியாக தேசிய மொழியாக ஏற்கக்கூடாது? கன்னடம், தமிழ் உள்ளிட்டவைகள் சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்திருக்கலாம் என செய்தியாளர்கள் மத்தியில் கூறியிருந்தார். அவரின் இந்த பதிவு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலகிலேயே மூத்த மொழி தமிழ் மொழிதான் என்பது வரலாற்று அறிஞர்களால் உறுதி செய்யப்பட்ட ஒன்று.

அப்படிப்பட்ட நிலையில் சமஸ்கிருதம் மூத்த மொழி என்றும், அதிலிருந்து தமிழ் பிறந்தது என்றும் கூறியுள்ள கங்கனா ரணாவத் பலரும் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கங்கனா ரணாவத் கருத்தை தவறு என குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். அதில் தமிழே பழமையான மொழி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இருந்து உருவானது தான் சமஸ்கிருதம் என ஒரு பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு கங்கனா ரனாவத் மற்றும் அவரது மூர்க்கமாக ஆதரிப்பவர்களுக்கு சவுக்கு அடியாக விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!