
இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என பலர் கூறுகின்றனர். ஆனால் பலரும் வடமாநிலத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வருகின்றனர் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இந்தி படித்தால் உயர்ந்து விடலாம் என கூறுகின்றனர், ஆனால் பலர் இங்கு பானிபூரி விற்றுக் கொண்டுள்ளனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமித்ஷா பேசிய பேச்சு இன்னும் நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இந்தி மொழியை நாட்டில் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் பேசினார். இது தென்னிந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் அமித்ஷாவின் இந்த பேச்சை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்தி மொழி திணிப்பு முயற்சி நாட்டின் ஒருமைப்பாட்டை கேள்விக்குறியாக்கும் என்றும் தமிழகம் கர்நாடகாவிலும் எச்சரிக்கை குரல் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த விவாதம் திரைத்துறையினர் மத்தியிலும் மோதலாக மாறியுள்ளது. கன்னட நடிகர் கிச்சா சுதீப் இந்தி தேசிய மொழி இல்லை என கூறியுள்ளார்.
அதற்கு இந்தி நடிகர் அஜய் தேவ்கன் இந்தி தேசிய மொழி இல்லை என்றால், எதற்காக கன்னடப் படங்களை இந்தியில் டப்பிங் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளதுடன், எப்போதுமே இந்தி தான் இந்தியாவின் தாய்மொழி, தேசிய மொழியாக இருக்கும் என கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு கர்நாடக மாநிலத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதே நேரத்தில் அஜய் தேவ்கன் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கருத்து கூறியுள்ளார். இந்தியை விடுங்க சமஸ்கிருதம்தான் இந்தியாவின் மூத்த மொழி, தமிழ் கன்னடத்தை விட பழம்பெரும் மொழி சமஸ்கிருதம்தான், எனவே அதை நாட்டின் இணைப்பு மொழியாக மாற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இந்தி மொழி விவகாரம் பலமுனைகளில் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. அமித்ஷாவின் இந்த கருத்தை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது, இந்நிலையில் திமுக மாணவரணி சார்பாக கல்வி சமூகநீதி கூட்டாட்சித் தத்துவம் என்ற தலைப்பில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்றும் நாளையும் தேசிய அளவிலான மாநில மாநாடு திமுக மாணவரணி சார்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நீட், க்யூட் நுழைவுத் தேர்வுகளும் அதன் பின்னணியில் உள்ள மர்மங்களும் என்ற தலைப்பிலும், தேசிய கல்வி கொள்கை ஒரு பாசிச நோக்கம், கல்விக் கொள்கையில் மாநில சுயாட்சி, இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், காவி மயமாகும் கல்வி நிறுவனங்கள், திராவிடத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களும் சிதையும் ஜனநாயக நிறுவனங்கள் என மொத்தம் ஏழு தலைப்பில் முக்கிய பிரமுகர்கள் மாணவர்கள் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் நான் 17 வருடம் வாத்தியாராக பணியாற்றியவன், உங்களைப் பார்க்கும்போது எனக்கு பழைய வகுப்புகள் எடுத்த நினைவுகள்தான் வருகிறது. மாநிலங்களை காப்பது ஆளுநரின் வேலையாக இருக்க வேண்டுமே தவிர மத்தியை காப்பது அல்ல, ஒரு தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவிற்கு சென்றிருந்தேன், அதில் 70 மாணவர்களில் 55 பெண்கள் பட்டம் பெற்றனர் அதைப் பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருந்தது. இந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும் என பலர் கூறி வருகின்றனர். ஆனால் பலரும் வடமாநிலத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வருகின்றனர். ஒரு சிலர் இங்கு பானிபூரி விற்றுக் கொண்டுள்ளனர் என நகைச்சுவையாக கூறினார். சமூக நீதி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட வற்றில் அப்பாவுக்கு தப்பாமல் பிறந்துள்ள மகனாக ஸ்டாலின் இருந்து வருகிறார். இவ்வாறு பொன்முடி தெரிவித்துள்ளார்.